புத்ராஜெயா: கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில், 2 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாள் நவம்பர் 28ஆம் தேதி என்றும், முன்கூட்டியே வாக்களிக்கும் நிகழ்வு டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரவாக் மாநிலம் அக்டோபர் 26ஆம் தேதியன்று தனது மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்தது. இது 60 நாள்களுக்குள் 13வது மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹாருன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, வாக்களிப்பு குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
கடந்த ஓராண்டுக் காலத்தில் மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் வரிசையில், சரவாக்கின் தேர்தலும் அமைகிறது. இந்த வரிசை, 2025 நவம்பர் 29ஆம் தேதி சாபாவில் தொடங்கிய தேர்தலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி ஜோகூரிலும், ஆகஸ்ட் 1ஆம் தேதி நெகிரி செம்பிலானிலும் தேர்தல்கள் நடைபெற்றன. மலாக்காவில் நவம்பர் 14ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
சாபா, ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் கிடைத்துள்ள முடிவுகள், பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்குப் பின்னடைவாக அமைந்தன.
சரவாக் மாநிலச் சட்டமன்றம் தற்போது 82 இடங்களைக் கொண்டுள்ளது. இதுவே நாட்டின் மிகப்பெரிய சட்டமன்றமாகும்.
அங்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் கபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போதைய எதிர்க்கட்சியான பார்ட்டி சரவாக் பெர்சத்து நான்கு இடங்களை வென்றது. ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) இரண்டு இடங்களைப் பெற்றது.
வரவிருக்கும் தேர்தலில் மொத்தம் உள்ள 82 தொகுதிகளிலும் போட்டியிட ஜிபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக, அதன் தலைவரும் சரவாக் மாநில முதல்வருமான அபாங் ஜோஹாரி ஓபெங் தெரிவித்துள்ளார்.
அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் அங்கமான டிஏபி, கூச்சிங், பாவ் பகுதிகளில் ஏழு தொகுதிகளில் போட்டியிடப்போவதாகவும், எட்டாவது தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
