முதலைகள் அச்சுறுத்தும் சம்பவங்களைக் குறைக்க முயல்கிறது சரவாக்

முதலைகள் அச்சுறுத்தும் சம்பவங்களைக் குறைக்க முயல்கிறது சரவாக்

படம்: ராய்ட்டர்ஸ்

03 Aug 2026 - 4:14 pm

2 mins read

சரவாக்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒரு காலத்தில் எழுதப்படாத விதியைப் பின்பற்றி வாழ்ந்து வந்தனர். ‘முதலையைத் தொந்தரவு செய்யாதீர், பதிலுக்கு அதுவும் உங்களை ஒன்றும் செய்யாது’ என்பதுதான் அது.

சமூகத்தின் தலைவரான டேனியல் முக்கிங் அந்த எழுதப்படாத விதியை இப்போது கடைப்பிடிப்பதில்லை. 2024ஆம் ஆண்டு மே மாதம் முதலை தாக்கியதால் அவரின் மகன் மாண்டுபோனதே அதற்குக் காரணம்.

“என்னுடைய மகனை அது தின்றுவிட்டது. அதைக் கொல்ல எனக்கு முழு உரிமையும் இருக்கிறது,” என்று அவர் சொன்னார்.

மாநிலத்தின் நதிகளில் முதலைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. போர்னியோ தீவில் உள்ள சரவாக்கில் அண்மை ஆண்டுகளில் மக்கள் முதலைகளை எதிர்கொள்ளும் சம்பவங்கள் கூடியிருக்கின்றன. 1980களில் அதிகப்படியாக வேட்டையாடப்பட்டதால் கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலைக்கு அவை தள்ளப்பட்டன. ஆனால் 2024ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 25,000ஐ கடந்துள்ளதாகக் கருத்தாய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2023ஆம் ஆண்டு முதல் 2025 வரை முதலைத் தாக்குதல்களால் 22 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் முதலைகள் தாக்கி ஐந்து பேர் மாண்டுவிட்டனர்.

வனவிலங்குகளைப் பேணிக்காப்பதற்கும் நதிக்கரை அருகில் வாழும் சமூகங்களின் பாதுகாப்பிற்கும் இடையில் அதிகாரிகள் சமநிலை காண்பது முக்கியம் என்று சரவாக் மாநில இயற்கைவளத் துணை அமைச்சர் லென் தாலிஃப் சாலே தெரிவித்தார்.

முதலைகளின் எண்ணிக்கையை நிர்வகிக்க, சரவாக் மாநில அரசாங்கம் வேட்டையாடுவதற்கான உரிமங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் பொதுமக்கள் முதலைகளைக் கண்டால் தகவல் தெரிவிப்பதற்காகப் புதிய செயலியையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள் முதலைகளை எதிர்கொள்வது அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறியுள்ளது. ஆயினும் 20 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் அவற்றின் தாக்குதல்கள் குறைந்துள்ளன என்று சரவாக் வனவியல் கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசரவாக்முதலைதாக்குதல்எச்சரிக்கை