கம்போடியாவிலிருந்து மோசடி: சந்தேக நபரின் முன்னாள் கப்பல் தலைவர் கைது

1 mins read
c48b11f9-0048-48b8-b6c1-e52827a4309b
நைஜல் டேங் வான் பாவ் நபில். - படம்: ஃபிரேசர் யோட்ஸ்

கம்போடியாவிலிருந்து இயங்கிய மோசடிக் கும்பலின் தலைவர் என நம்பப்படும் சென் ‌ஷிக்குச் சொந்தமான ‘சூப்பர்யோட்’ கப்பலின் முன்னாள் மாலுமியை சிங்கப்பூர் கைது செய்துள்ளது.

நைஜல் டேங் வான் பாவ் நபில் எனும் அந்நபர் இம்மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியதும் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை (டிசம்பர் 18) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. புளூம்பர்க் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்குக் காவல்துறை பதிலளித்தது.

குற்றம் புரிந்திருக்கக்கூடியவர் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ள டேங் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

டேங், சென் ‌ஷி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட, கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டதாக மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது. சீனாவில் பிறந்த கம்போடியக் குடிமகனான சென், ஊழியர்களை அடிமைகளாக நடத்தி எல்லை தாண்டிய குற்றக் கும்பலை நடத்தியவர் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வகைப்படுத்தியுள்ளது.

38 வயது சென் தற்போது தேடப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 32 வயது டேங்குக்கும் சென்னுக்கும் இருந்த தொடர்பின் காரணமாக அவரும் குற்றம் புரிந்திருக்கக்கூடியவர் என்று கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்கா வகைப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்