பேங்காக்: மற்ற நகரங்களைவிட தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் சுற்றுப்பயணிகளுக்கு எதிராக அதிகளவில் மோசடிக் குற்றங்கள் நடக்கின்றன.
இதுதொடர்பான அறிக்கையை மாஸ்டர்கார்டு இக்கனாமிக்ஸ் கழகம் வெளியிட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் மிக எளிதில் ஏமாற்றக்கூடிய துறைகளில் சுற்றுப்பயணத்துறையும் ஒன்று.
குறிப்பாக, விடுமுறைக் காலங்களின்போது பயணம் செய்யும் சுற்றுப்பயணிகள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர்.
மற்ற துறைகளைக் காட்டிலும் பயண முகவைகள், சுற்றுப்பயண முன்பதிவுகள் ஆகியவற்றில் நடக்கும் மோசடிகள் நான்கு மடங்கிற்கும் அதிகம்.
சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக உள்ள இடங்களில் கோடைக்காலத்தின்போது மோசடிக் குற்றங்களின் எண்ணிக்கை 18 விழுக்காட்டுக்கும் அதிகம் ஏற்றம் காண்கிறது.
குளிர்காலத்தில் 28 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்கிறது.
பேங்காக்கில் டாக்சி, கார் வாடகை சேவைகளில் அதிக மோசடிகள் நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பேங்காக்கில் பதிவாகும் மோசடிக் குற்றங்களில் 48 விழுக்காட்டு குற்றங்கள் டாக்சி மற்றும் கார் வாடகை சேவையுடன் தொடர்புடையவை.
சேவைக்கான பணம் செலுத்தப்பட்டதை அடுத்து, சேவை வழங்கப்படுவதில்லை அல்லது விளம்பரம் செய்யப்பட்டதைவிட மிகவும் வித்தியாசமான சேவை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹோட்டல் முன்பதிவுகளைப் பொறுத்தவரை, தாய்லாந்தின் புக்கெட் தீவிலும் துருக்கியின் அந்தால்யாவிலும் அதிக மோசடி நடப்பதாக அறிக்கை தெரிவித்தது.
சான் ஃபிரான்சிஸ்கோ, டப்ளின், சோல், புடாபெஸ்ட், எடின்பரோ ஆகிய நகரங்களில் மோசடிகள் குறித்து சுற்றுப்பயணிகள் செய்யும் புகார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று மாஸ்டர்கார்டு நிறுவனம் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
பேங்காக், கன்குன், ஹனோய், டாக்கா ஆகிய நகரங்களில் இது நேர்மாறாக உள்ளது.

