ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உயரமான கட்டடச் சொத்துகளின் விற்பனை சூடுபிடித்து வருகிறது.
மோசடிக் கும்பல்கள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் பதுங்கியிருந்து அவர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் செல்வந்தர்கள், வேலை தேடும் சாதாரண மக்கள் போன்றோரை மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர். ஏமாற்றப்படுவோர் அனைவரும் வெளிநாடுகளில் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா, டென்மார்க், போலந்து போன்ற நாடுகளில் அவர்கள் இருக்கின்றனர்.
கடந்த சில நாள்களாக ஜோகூர் பாருவில் உள்ள சொகுசு கொண்டோமினியம் வீடுகள் நான்கில் சோதனையிட்டபோது காவல்துறை, குற்றக் கும்பல்களைக் கண்டுபிடித்தது. 14 பேர் வரை காவல்துறையினர் பிடித்தனர். அவர்களில் ஐவர் மலேசியர்கள்.
100,000 ரிங்கிட்டுக்கும் (32,000 வெள்ளி) அதிக மதிப்புள்ள கைப்பேசிகள், பெயர் பட்டியல்கள், மற்ற பல பொருள்கள் ஆகியவற்பைப் பறிமுதல் செய்ததாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சோதனையிடப்பட்ட வீடுகளில் இரண்டு, வெளிநாடுகளில் வசிக்கும் செல்வந்தர்களுக்கு முதலீட்டுப் ‘பொருள்களை’ விற்பதற்கான நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டன என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
“100 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்து அந்தக் குற்றக் கும்பல், செல்வந்தர்களை ஈர்க்கிறது,” என்றும் அவர் விவரித்தார்.
ஆகக் கடைசி நிலவரப்படி, இந்த மோசடி நிலையங்கள் ஒரு குற்றக் கும்பலுடன் தொடர்புடையவையா என்பதைத் தெரிந்துகொள்ளும் முயற்சிகளை மலேசிய வர்த்தகக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. 12க்கும் அதிகமான கொண்டோமினிய வீடுகளைக் காவல்துறை சோதனையிட்டிருப்பதாகவும் சீனா, மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் இருப்போரைக் குறிவைக்கும் 80க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் பிடிபட்டனர் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“சந்தேக நபர்கள் பெரும்பாலோரிடம் அவர்களின் கடப்பிதழ்கள் இல்லாததுதான் ஆச்சரியமானது. குற்றக் கும்பல் தலைவர்கள் அவற்றை வைத்துக்கொண்டிருக்கின்றனர்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
“குற்றக் கும்பல் உறுப்பினர்கள் சிலருக்கு தரகுத் தொகையைத் (commission) தவிர்த்து மாதத்துக்கு 6,000 ரிங்கிட் வழங்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

