பள்ளிப் பாதுகாப்புப் பணிக்குழு அமைக்கப்படும்: ஜோகூர் அரசாங்கம்

பள்ளிப் பாதுகாப்புப் பணிக்குழு அமைக்கப்படும்: ஜோகூர் அரசாங்கம்

1 mins read
பத்து பகாட்டில் வேன் மோதியதில் தொடக்கப்பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை
5b665c16-52f6-48ef-ab66-079959b88cd2
ஜோகூர் கல்வி, தகவல் குழுத் தலைவர் அஸ்னான் தமின், சிறப்புப் பள்ளிப் பாதுகாப்புப் பணிக்குழு குறித்து மே 6ஆம் தேதி செய்தியாளர்களிடம் விளக்கினார். - படம்: மலாய்மெயில்

இஸ்கந்தர் புத்ரி: பத்து பகாட்டில் நேற்று வேன் மோதி தொடக்கப்பள்ளி இரண்டாம் ஆண்டு பயிலும் சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஜோகூர் மாநில அரசு புதிய சிறப்புப் பணிக்குழுவை அமைக்கவுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள்ளும் அதன் வெளிப்புறத்திலும் மாணவர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்து மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று ஜோகூர் கல்வி, தகவல் குழுவின் தலைவர் அஸ்னான் தாமின் தெரிவித்தார். பள்ளி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்தப் பணிக்குழு தற்போதைய வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதுடன், புதிய தீர்வுகளையும் முன்மொழியும்,” என்று புதன்கிழமை (மே 6), கோத்தா இஸ்கந்தரில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

நேற்று பாரிட் சுலோங்கில் உள்ள ஸ்ரீ மைமோன் தேசியப் பள்ளியின் வேலிக்கு அருகே, ‘டெலிவரி’ வேன் மோதியதில் எட்டு வயது நூர் அய்னி உமைரா முகமட் ஃபாரீஸ் எனும் மாணவி உயிரிழந்தார்.

தஞ்சோங் சூரத் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்னான், அடுத்த மாதத் தொடக்கத்தில் ‘பாதுகாப்பான பள்ளி’ எனும் பிரசாரத்தைப் புதிய பணிக்குழு தொடங்கும் என்றும், இது ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றும் தெரிவித்தார். பள்ளிகளுக்குள் வாகனங்கள் நுழைவது, வெளியேறுவது தொடர்பான தற்போதைய நடைமுறைகள் (SOP) விரிவாக மறுஆய்வு செய்யப்படும்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஜோகூர் கல்வித் துறை மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அவர்களுக்குத் தேவையான இதர உதவிகள் செய்யப்படும் என்றும் திரு அஸ்னான் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்