ஜோகூர் பாரு: புகைமூட்டத்தால் ஏற்பட்டுள்ள மோசமான காற்றுத்தரத்தால் ஜோகூர் மாநில அரசாங்கம் அங்குள்ள பள்ளிகளையும் கல்வி நிலையங்களையும் மேலும் ஐந்து நாள்களுக்கு மூடும்படி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே அங்கு பள்ளிகள் அக்டோபர் 8ஆம் தேதி முதல் இரண்டு நாள்களுக்கும் பிறகு அக்டோபர் 12 முதல் ஐந்து நாள்களுக்கும் மூடப்பட்டிருந்தன.
தற்போது திங்கட்கிழமை (அக்டோபர் 19) முதல் மேலும் ஐந்து நாள்கள் அந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டுக் குறியீடு (ஏபிஐ) மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் நீடித்திருப்பதாகவும் அதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் மாநிலக் கல்வி, தகவல் குழுவின் தலைவர் முகம்மது நகிப் முகம்மது கசாலி தெரிவித்தார்.
ஜோகூர் புகைமூட்ட நிர்வாக ஒருங்கிணைப்புக் குழுவுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு பள்ளிகள் தொடர்ந்து மூடியிருப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
நடப்பில் உள்ள சுகாதார ஆய்வுகள், வானிலை, காற்றுத் தரம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பள்ளிகளை மூடும் நடவடிக்கை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளைத் தவிர்த்து, வீட்டில் இருந்து கல்வி பயிலும் கல்வி அமைச்சின் நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் அவர் விளக்கினார்.
மாநில ஆளுநர் மக்கோத்தா இஸ்மாயில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கம் பொது சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின்மீது வைத்துள்ள கடப்பாட்டை இது வெளிப்படுத்துவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
