உலகப் பருவநிலை தாக்கம் குறித்து அறிவியல் நிபுணர்கள் கவலை

உலகப் பருவநிலை தாக்கம் குறித்து அறிவியல் நிபுணர்கள் கவலை

மனிதர்கள் ஏற்படுத்திய பருவநிலை மாற்றங்களால் பெரும் பாதிப்பு
1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ஏஎஃப்பி

11 Jun 2026 - 5:13 pm

2 mins read

காத்மாண்டு: கடும் மழையால் தெற்காசியச் சமூகங்கள் பேரிடர்களை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதெனப் பருவநிலை நிபுணர்கள் வியாழக்கிழமை (ஜூன் 11) எச்சரித்துள்ளனர்.

வழக்கத்தைவிடப் பருவமழை அதிக அளவில் பெய்யாதென எதிர்பார்க்கப்பட்டாலும் வறட்சி எற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ட்டிக், அன்டார்ட்டிக் கண்டங்களில் உள்ள பனிக்கட்டிகளுக்கு அடுத்த நிலையில் பனி அதிகம் படர்ந்திருக்கும் இந்துகோஷ் மலைத்தொடர் ஆசியாவின் 10 முக்கிய நதிகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது.

ஆப்கானிஸ்தான் முதல் மியன்மார் வரையில் நீளும் அந்த மலைத்தொடர் தண்ணீர், உணவு ஆகியவற்றுடன் எரிபொருள் பாதுகாப்புக்கும் ஆசியக் கண்டத்துக்கு அத்தியாவசியமானதாகும்.

ஒட்டுமொத்தத்தில், வரப்போகும் பருவமழை வறட்சிக்கு வழிவகுத்தாலும் எந்த அபாயமும் இல்லை என்று எடுத்துக்கொள்ளமுடியாது என்று கத்மாண்டுவில் தலைமையகம் அமைத்துள்ள அனைத்துலக ஒருங்கிணைந்த மலைகள் மேம்பாட்டு மையத்தின் (ICIMOD) மணிஷ் ஷ்ரேதா கருத்துரைத்தார்.

உலகப் பருவநிலையைப் பொறுத்தமட்டில் அதனைக் கணிப்பதற்கான முயற்சிக்கென வழங்கப்பட்ட நிதி ஆதரவை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மீட்டுக்கொண்டதால் ஏற்பட்டுள்ள தொய்வு கவலையளிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதோடு உலக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அவர்கள் குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகப் பருவநிலை ஆய்வு

ஐக்கிய நாட்டு நிறுவன உறுப்பு நாடுகளுக்கு இடையில் அமைக்கப்பட்ட பருவநிலை மாற்றத்துக்கான மன்றம் ஆண்டுதோறும் வெளியிடும் ஆய்வில் இந்த விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

ஏறத்தாழ 70 விஞ்ஞானிகள் மனிதர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றங்கள், கடல்நீரிலும் அதிகரித்துள்ள வெப்ப அலையின் சீற்றம் குறித்து ஆய்வில் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பருவநிலை மாற்றம், 2030ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலையின் ஒட்டுமொத்த அளவை 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பருவநிலைஆய்வுபருவமழைவறட்சிவெள்ளம்இமயமலைபனிப்பொழிவு