பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (சீ கேம்ஸ்) தாய்லாந்தின் அரசி தங்கம் வென்றுள்ளார்.
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொங்கோர்னின் மனைவியான அரசி சுத்திடா படகோட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். எஸ்எஸ்எல்47 பிரிவில் 14 மீட்டர் நீளம்கொண்ட படகில் ஒன்பது குழுவினருடன் சேர்ந்து வாகை சூடினார்.
தாய்லாந்தின் பட்டாயா நகருக்கு அருகே 47 வயது சுத்திடா, தனது குழுவினரை வழிநடத்தி வெற்றி தேடித் தந்தார். மலேசியா, மியன்மார் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளித் தங்கம் வென்றது தாய்லாந்து.
இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளை தாய்லாந்து ஏற்று நடத்துகிறது.
அரசி சுத்திடாவுக்கு அவரின் கணவரும் தாய்லாந்து மன்னருமான வஜிரலொங்கோர்ன், 73, வியாழக்கிழமை (டிசம்பர் 18) பதக்கத்தை வழங்கத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவரும் 2019ஆம் ஆண்டு மணமுடித்தனர்.
தொடர்புக் கல்வியில் பட்டம் பெற்ற அரசி சுத்திடா, தாய் ஏர்வேஸ் விமானப் பணியாளராக வேலை செய்தார். பின்னர் அவர் ராணுவத்தில் சேர்ந்துப் பணியாற்றினார்.
விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், கடந்த மாதம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் அரை நெடுந்தொலைவோட்டத்தை (half marathon) இரண்டு மணிநேரம், 13 நிமிடங்கள், 40 வினாடிகளில் முடித்தார். இம்மாதம் ஒன்பதாம் தேதி இந்தத் தென்கிழக்காசிய விளையாட்டுகள் தொடக்க நிகழ்ச்சியில் அவர் தாய்லாந்து அணியினரை வழிநடத்தினார்.
படகோட்டத்தில் ஏற்கெனவே தாய்லாந்து மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர் தங்கம் வென்றிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
வஜிரலொங்கோர்னின் தந்தையான மன்னர்பூமிபொல் அதுல்யதெஜ், 1967 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் படகோட்டப் பேட்டி ஒன்றில் தங்கம் வென்றார். தாமே சொந்தமாக உருவாக்கிய படகில் தமது மூத்த மகளான இளவரசி உபொல்ரத்தன ராஜகன்யாவுடன் சேர்ந்து அவர் தங்கம் வென்றதாக தென்கிழக்காசிய விளையாட்டுகளின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுத் தென்கிழக்காசிய விளையாட்டுகள் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நிறைவடையும். வியாழக்கிழமை மாலை நிலவரப்படி தாய்லாந்து, பதக்கப் பட்டியலில் பெரிய அளவு வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது.

