பேங்காக்: தாய்லாந்தில் கட்டுமானத் தளப் பாரந்தூக்கி ஒன்று விழுந்ததில் இரண்டு வாகனங்கள் நசுங்கியதுடன் இருவர் உயிரிழந்ததாக வியாழக்கிழமை (ஜனவரி 15), காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் புதன்கிழமை ரயில் ஒன்றின்மீது பாரந்தூக்கி விழுந்ததில் பயணிகள் 32 பேர் மாண்டனர்.
தற்போது நடந்திருக்கும் விபத்து தலைநகர் பேங்காக்கிற்கு அருகில் உள்ள சமுட் சக்கோன் மாநிலத்தில் நேர்ந்தது. கட்டுமானப் பணிகளுக்காக மேம்பாலத்திலிருந்த பாரந்தூக்கி பாலத்திற்குக்கீழ் இருந்த சாலையில் விழுந்ததாகக் காவல்துறை கர்னல் சித்திபோர்ன் காசி சொன்னார்.
சம்பவத்தில் ஐவருக்குக் காயம் ஏற்பட்டதாக மற்றொரு காவல்துறை அதிகாரி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
புதன்கிழமை நடந்த பாரந்தூக்கி விபத்தில் ரயிலிலிருந்த 195 பயணிகளில் 32 பேர் மாண்டனர், 66 பேர் காயமுற்றனர். ரயிலின் ஒரு பெட்டிமீது பாரந்தூக்கி விழுந்ததை அடுத்து, அந்த ரயில் தடம்புரண்டது.
நக்கோன் ரட்சசிமா மாநிலத்தின் சிக்கியோ மாவட்டத்தில் புதன்கிழமை (ஜனவரி 14) காலை 9 மணியளவில் விபத்து நேர்ந்தது.
அதிவிரைவு ரயில் திட்டப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாரந்தூக்கி நிலைகுலைந்து அவ்வழியாகச் சென்ற ரயில்மீது விழுந்தது என்று காவல்துறை கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, தடம்புரண்ட அந்த ரயிலில் சிறிது நேரம் தீப்பற்றியதாகவும் பின்னர் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்று தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சர்ன்விராக்குல் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
விசாரணை தொடர்கிறது.

