காஸாவில் தொடங்கியது அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம்

2 mins read
598f7d4e-97fc-4168-9e16-42fe6fc3ab7f
காஸாவை நிர்வகிப்பதற்கான பாலஸ்தீனத் தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைப்பதாகக் கத்தார், எகிப்து, துருக்கி ஆகியவை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: காஸாவுக்கான அமைதி உடன்பாட்டின் இரண்டாம் கட்டம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்கும் இடையிலான பூசலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 20 அம்ச அமைதி உடன்பாட்டைக் கடந்த ஆண்டு அறிவித்தார்.

உடன்பாட்டின் இரண்டாம் கட்டத்தில் போரால் நிலைகுலைந்த காஸாவில் ராணுவங்கள் கலைக்கப்படுவதுடன் தொழில்நுட்ப ரீதியாக அது நிர்வகிக்கப்படும் என்று மத்தியக் கிழக்கிற்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீஃப் விட்காஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

ஹமாஸ், இரண்டாம் கட்ட நிபந்தனைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்காவிட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

காஸாவை நிர்வகிப்பதற்கான பாலஸ்தீனத் தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைப்பதாகக் கத்தார், எகிப்து, துருக்கி ஆகியவை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

அதை, பாலஸ்தீன அரசாங்கத்தில் பல்வேறு மூத்த பொறுப்புகளை வகித்த திரு அலி ‌‌‌ஷாஆத் வழிநடத்துவார் என்று அந்த மூன்று நாடுகளும் கூறின.

புதிய நிர்வாகம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொதுச் சேவைகளைச் சீர்படுத்தும் என்று தூதர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனினும், காஸாவில் கிட்டத்தட்ட பாதிப் பகுதி ஹமாசின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் ஹமாஸ் அதன் ஆயுதங்களைக் களைய மறுப்பதாலும் நீடித்த அமைதி குறித்த சந்தேகம் நிலவுகிறது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி பிணைபிடிக்கப்பட்டோர் சிலரின் உடல்களை ஹமாஸ் இன்னமும் திரும்பத் தரவில்லை.

நல்லெண்ணம் கொண்ட பாலஸ்தீன அதிகாரிகள் உடல்கள் இருக்கக்கூடிய சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அவற்றைத் தேடுவதற்கான பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்