சாபா: மலேசிய மாநிலங்களான சரவாக் மற்றும் சாபாவை இணைக்கும் இரண்டாம் கட்ட சாலைப் பணிகள் தொடங்கியுள்ளன.
இணைப்புச் சாலையின் பணிகள் முடிந்துவிட்டால் இந்த இரு மாநில மக்களும் புரூணை நாட்டுக்குள் செல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.
இரண்டாம் கட்டப் பணிகள் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) தொடங்கின. அதில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர் ஃபடில்லா யூசஃப் கலந்துகொண்டனர்.
“இந்த இணைப்புச் சாலை வடக்கு சரவாக் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும். அவர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, கடப்பிதழ், குடிநுழைவுச் சோதனை உள்ளிட்ட அம்சங்கள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை,” என்று திரு யூசஃப் கூறினார்.
“இந்த இணைப்புச் சாலை கிராம மக்களுக்குப் புதிய பொருளியல் வாய்ப்புகளை உருவாக்கும், நகரங்கள்போல் கிராமங்களும் வளர்ச்சி அடையும்,” என்றார் அவர்.
335 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த இணைப்புச் சாலை 2029ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். அதற்கான செலவு 7.6 பில்லியன் ரிங்கட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சாலைப் பணி 2021ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது அது கிட்டத்தட்ட 58 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.

