சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் இரண்டாவது விமானி மீட்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் இரண்டாவது விமானி மீட்பு

2 mins read
6e9237b7-0995-4afd-bfcb-3acf3f41f13b
அமெரிக்க விமானப் படையின் ‘எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள்’ விமானம். - கோப்புப்படம்: நியூயார்க் டைம்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்திலிருந்து, எதிரிநாட்டு எல்லைக்குள் சிக்கியிருந்த விமானியை மீட்டுவிட்டதாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) அதிகாலை தெரிவித்தது.

இதன்மூலம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பிற்கு ஏற்பட்டிருந்த ஒரு பெருநெருக்கடி முடிவிற்கு வந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது.

“கடந்த சில மணி நேரங்களில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடி, மீட்கும் நடவடிக்கைகளில் ஒன்றை அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது,” என்று எக்ஸ் தளத்தில் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கரோலின் லீவிட் பதிவிட்டுள்ளார்.

விமானி காயமடைந்துள்ளபோதும் அவர் நலமாக இருப்பார் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

தனது வான்வெளிக்குள் நுழைந்த அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டதாக வெள்ளிக்கிழமை ஈரான் தெரிவித்தது. அதிலிருந்த இரு விமானிகளில் ஒருவர் ஏற்கெனவே மீட்கப்பட்டுவிட்ட நிலையில், இரண்டாவது விமானியை ஈரானும் அமெரிக்காவும் தீவிரமாகத் தேடிவந்தன.

இந்த மீட்பு நடவடிக்கையில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதற்கு ஈரானியத் தரப்பிலிருந்து கடுமையான எதிர்நடவடிக்கையும் இருந்தது.

தற்போது நடந்துவரும் மத்திய கிழக்குப் போரில் இதுவரை அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதன் மத்திய தளபத்தியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படையினர் எவரும் போர்க்கைதியாக ஈரானிடம் பிடிபடவில்லை.

முன்னதாக, சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 10 மணிக்குள் போரை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டிற்கு ஈரான் இணங்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்திருந்தார்.

எதிரிப் படைக்குச் சேதம்: ஈரான்

இதற்கிடையே, சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்து விமானப்படை வீரரை மீட்கும் அமெரிக்க நடவடிக்கை ‘முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது’ என்று ஈரான் ராணுவம் ஏப்ரல் 5ஆம் தேதி அன்று கூறியது. ஆனால் அவர் சிறைபிடிக்கப்பட்டார் என்று அது குறிப்பிடவில்லை.

இதனிடையே, விமானியை மீட்கும் அமெரிக்க நடவடிக்கையின்போது தனது வான்வெளியில் பறந்த எதிரிப்படைகளின் பல வானூர்திகளை அழித்துவிட்டோம் என ஈரானின் புரட்சிப் படையினர் கூறியதாக ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“விமானப் படை, தரைப்படை, காவல்துறைத் தளபத்தியம் உள்ளிட்டவற்றின் கூட்டுநடவடிக்கையின்போது ஈரானிய வான்வெளியில் பறந்த எதிரிகளின் உடைமைகளை அழித்துவிட்டோம்,” என்று புரட்சிப் படை குறிப்பிட்டது.

முன்னதாக, இஸ்ஃபகானுக்குத் தெற்கே அமெரிக்காவின் சி-130 ராணுவப் போக்குவரத்து விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் காவல்துறைத் தளபத்தியம் அறிவித்திருந்தது. மேலும், இரு ‘பிளாக் ஹாக்’ வகை ஹெலிகாப்டர்களும் வீழ்த்தப்பட்டதாக அது தெரிவித்தது.

அதே பகுதியில் இஸ்ரேலின் ஆளில்லா வானூர்தி ஒன்றும் அழிக்கப்பட்டதாக ஈரானிய ராணுவம் முன்னதாகக் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்