வாஷிங்டன்: பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக்காக அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் ஐரோப்பாவுக்குத் தனித்தனியாகப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
பாதுகாப்பு, உக்ரேன் விவகாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு குறித்து அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்காப்புச் செலவினங்களை அதிகரிக்குமாறு ஐரோப்பியத் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனுக்கு நிதி வழங்குவது தொடர்பாகத் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமெரிக்க அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் உக்ரேனுக்கு பில்லியன்கணக்கில் நிதி வழங்கியது.
இந்நிலையில், பிரான்சில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் கலந்துகொள்கிறார்.
அதன் பிறகு அவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஜெர்மனியில் நடைபெறும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, திரு ரூபியோ மத்தியக் கிழக்கிற்குப் பயணம் மேற்கொள்வார்.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹேக்செத், ஜெர்மனியில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவத் தளபத்தியங்களுக்குச் செல்லவிருக்கிறார்.
அதை அடுத்து, பெல்ஜியத்திற்குப் பயணம் மேற்கொண்டு நேட்டோ நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசுவார்.
உக்ரேனின் அனைத்துலக ஆதரவாளர்களையும் திரு ஹேக்செத் சந்திக்க இருக்கிறார்.
போலந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் திரு ஹேக்செத் அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.

