வெள்ள பாதிப்பைக் குறைக்கும் முயற்சியை துரிதப்படுத்தவுள்ள சிலாங்கூர்

2 mins read
54034043-5d4e-4629-bf6f-3f152cad732a
சிலாங்கூரின் காம்புங் பாங்கி தம்பாஹானில் 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம். - படம்: பெர்னாமா

சாபாக் பெர்னாம் (மலேசியா): மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், திட்டமிடப்படாத வீடுகளும் கிராமங்களும் அமைக்கப்படுவது வெள்ளத்தால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக இருந்துவரும் அம்சங்களில் அடங்கும் என்று பெர்னாமா ஊடகம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்களைப் பாதிக்கும் பேரிடர்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பல கிராமங்களில் உடனடியாக வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அண்மைய புள்ளி விவரங்கள் காட்டுவதாக மாநில உள்கட்டமைப்பு, வேளாண் குழுத் தலைவர் இ‌ஷாம் ஹ‌ஷிம் தெரிவித்தார்.

“மாநில அரசாங்கம் கூடுதல் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். வேறு வழியில்லாவிட்டால் முக்கிய சாக்கடைகள், தற்காலிக நீர்த் தடுப்புகள் ஆகியவற்றைக் கட்டும் நடவடிக்கைகளை எடுப்போம். இப்பிரிச்சினையைக் கையாள மக்களுக்கு உதவும் முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்கக்கூடாது.

“கணிக்க முடியாத வானிலை நிலவரத்தால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அதனால் பயங்கரமான பின்விளைவுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இனியும் காத்திருக்க முடியாது,” என்று திரு இ‌ஷாம் சனிக்கிழமை (மே 3) செய்தியாளர்களிடம் கூறினார்.

வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தொடர்பில் நிலவரத்தை மேலும் நன்கு அறிய, கிள்ளானில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 4) தாம் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்தார். பொதுப் பணிகள் பிரிவு, நீர் விநியோக, வடிகால் பிரிவு (Public Works Department, Department of Irrigation and Drainage) போன்றவை அதில் சம்பந்தப்படும் என்றும் அவர் கூறினார்.

“இனியும் காத்திருக்க முடியாது. பெரிய திட்டங்கள் நிறைவடைந்துவரும் வேளையில் நானே நேரில் சென்று ஒவ்வொரு பகுதியையும் பார்த்து, வருமுன் காப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வேன்,” என்று திரு இ‌ஷாம் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம், தாமான் ஸ்ரீ மூடா, மேரு, தாமான் செரி அலாம் உள்ளிட்ட அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் 11 பகுதிகளுக்கான வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

குறிப்புச் சொற்கள்