மலேசிய மாநிலங்களில் இணைய மோசடி: அதிகத் தொகையை இழந்தது சிலாங்கூர்

மலேசிய மாநிலங்களில் இணைய மோசடி: அதிகத் தொகையை இழந்தது சிலாங்கூர்

கோப்புப்படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Oct 2026 - 5:05 pm

2 mins read

ஷா ஆலம்: மலேசியாவிலேயே சிலாங்கூர் மாநிலத்தில்தான் கடந்த ஆண்டு இணைய மோசடியில் அதிகமான தொகை பறிபோனது.

2025ஆம் ஆண்டு நாடு முழுவதும் இணைய மோசடியில் சிக்கி 2.97 பில்லியன் ரிங்கிட்டை (S$93 மில்லியன்) மக்கள் இழந்தனர்.

அந்த இழப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கான 986.79 மில்லியன் ரிங்கிட் சிலாங்கூர் மாநிலத்தில் இணைய மோசடிக்காரர்களின் கைகளுக்குப் போயுள்ளது.

அந்த மாநிலத்தில் 2024ஆம் ஆண்டு 446.16 மில்லியன் ரிங்கிட் மோசடியில் பறிபோன நிலையில், கடந்த ஆண்டு அந்தத் தொகை இரட்டிப்பானது.

இணைய மோசடிச் சம்பவங்கள் சிலாங்கூரில் அதிகரித்து வருவதை இது உணர்த்துகிறது.

இது குறித்து மலேசிய மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் கூறுகையில், இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பை நிதி நிறுவனங்களுடனும் அமலாக்க முகமைகளுடன் இணைந்து மத்திய வங்கி தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மோசடிமூலம் பறிக்கப்பட்ட நிதியைக் கண்டறிவதை விரைவுபடுத்துவது, இணைய வங்கிப் பாதுகாப்பைக் கடுமையாக்குவது போன்றவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் அவர்.

“இருப்பினும், ஒரு வலுவான அமைப்பு மட்டுமே போதுமானதாக இருக்காது.

“முதற்கட்டப் பாதுகாப்பு என்பது நமது சொந்த விழிப்புணர்விலிருந்தே தொடங்குகிறது,” என்று திரு அப்துல் ரஷீத் கூறினார்.

“யாரோ ஒருவர், உடனடியாகச் செயல்படுமாறு நெருக்கடி கொடுக்கும்போது, தகவல்களைப் பகிர்வதற்கு அல்லது பணத்தை மாற்றுவதற்குமுன் அதிகாரபூர்வ வழிகள்மூலம் பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும்.

“மோசடி அபாயத்தைக் குறைக்க நிதி நிறுவனங்களும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளின்மீது விரைவாகச் செயல்பட வேண்டும்,” என்று அவர் சனிக்கிழமை (அக்டோபர் 24) நடைபெற்ற ‘சிலாங்கூர் நிதி விழிப்புணர்வு விழாவில் பேசும்போது தெரிவித்தார்.

உள்துறை அமைச்சுத் தரவுகளின்படி, நாடு முழுவதும் இணைய மோசடிகளால் ஏற்பட்ட இழப்பு 2024ஆம் ஆண்டு 1.57 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த நிலையில், 2025ல் அது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 2.97 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தது.

சிலாங்கூருக்கு அடுத்து கோலாலம்பூரும் இணைய மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்