தன்னைத்தானே மேம்படுத்தும் ‘ஏஐ’: சீனாவின் ஐந்துகட்டத் திட்டம்

தன்னைத்தானே மேம்படுத்தும் ‘ஏஐ’: சீனாவின் ஐந்துகட்டத் திட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

18 Sep 2026 - 5:06 pm

2 mins read

பெய்ஜிங்: அமெரிக்காவுடனான செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) போட்டியில் சீனா புதிய பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது.

மனித உதவியின்றி, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளே தங்களை மேம்படுத்திக்கொள்ளும் தானியக்கப் கட்டமைப்புகளை உருவாக்கச் சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

இதற்காக, ‘பைட் டான்ஸ்’ நிறுவனம், சிங்குவா பல்கலைக்கழகம், ‌‌‌ஷாங்காய் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர்.

‘மனிதர்களால் உருவாக்கப்பட்ட கடைசிச் செயற்கை நுண்ணறிவு’ என்ற அக்கட்டுரையில் ‘தொடர் சுய மேம்பாட்டிற்கான’ ஐந்துகட்ட வழிகாட்டித் திட்டம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், மனிதர்கள் உருவாக்கிய மேம்பாட்டு வழிமுறைகளைச் செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தும். அடுத்தடுத்த கட்டங்களில், மனிதக் கட்டளைகளைச் சார்ந்திருக்காமல், தங்கள் மேம்பாட்டு முறைகளை அவையே தாமாகவே தேர்ந்தெடுக்கும்.

புதிய தகவல்கள், அனுபவங்களைப் பெற்று, பயன்பாட்டிற்குப் பிந்தைய மாற்றங்களுக்கு ஏற்ப அவை தங்களை மாற்றியமைத்துக்கொள்ளும். இறுதிக்கட்டத்தில், தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைச் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளே தொடர்ந்து சுயமாகச் சீரமைத்துக்கொள்ளும்.

ஒரு பதிலைச் சரிசெய்யும் ‘சாட்போட்’ போல் இல்லாமல், இந்தத் தொடர் சுய மேம்பாடு பல பணிகளிலும் நீடித்து, அதன்பின் வரும் அமைப்புகளுக்கும் கடத்தப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

இது சாத்தியமானால் மேம்பாட்டுச் சுழற்சி குறைவதோடு உழைப்பு, கணினிச் செலவுகள் வெகுவாகக் குறையும்.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியைத் தானியக்கமாக்குவது அமெரிக்க-சீனப் போட்டியில் முக்கியக் களமாக உருவெடுத்துள்ளது.

போதிய கணினி வளங்கள் இல்லாவிட்டாலும், இருப்பவற்றில் சிறந்த செயல்திறனை வெளிக்கொணர்வதில் சீன ஆய்வாளர்கள் திறன் மிக்கவர்களாக உள்ளனர் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சவால்களுக்கு மத்தியிலும், சீன நிறுவனங்கள் தானியக்கப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

‘ஜிபு ஏஐ’ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மாதிரி அமைப்புகளையும் சுயபயிற்சிக் கட்டமைப்பையும் உருவாக்க, அண்மைய நிதித் திரட்டலான 5 பில்லியன் டாலரில் 60 விழுக்காட்டை ஒதுக்கப்போவதாக சில நாள்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
ஏஐசீனாசெயற்கை நுண்ணறிவு