நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்-சீனா உறவுகள் ‘மிகவும் மதிப்புமிக்கவை’

3 mins read
திரு லீ, மூத்த அமைச்சர் பொறுப்பை ஏற்ற பின், பெய்ஜிங்கில் சீன அதிபரை முதன்முறையாக சந்தித்துப் பேசினார்
6fe4d70f-a112-4227-8b3b-32778e8a0dd3
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) பெய்ஜிங்கில் சந்தித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

பெய்ஜிங்: நிச்சயமற்ற, பிரச்சினைகள் நிறைந்த உலகச் சூழலில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மிகவும் மதிப்புமிக்கது என மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே பதற்றநிலை தீவிரமடைந்துள்ளது என்றும் பொருளியல் ஒருங்கிணைப்பு, அனைத்துலக பலதரப்பு ஒத்துழைப்புக்குப் பதிலாக தேசியப் பாதுகாப்பையும் விநியோகத் தொடர் மீள்திறனையும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன என்றும் அவர் சொன்னார்.

“இத்தகைய ஒரு சூழலில், ஒரே எண்ணம் கொண்டுள்ள நாடுகள், பெரிதானவையும் சிறிதானவையும், ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசியபோது திரு லீ இதனைத் தெரிவித்தார்.

திரு லீ, சீனாவுக்கு ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மே மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு, மூத்த அமைச்சர் என்ற புதிய பொறுப்பில் சீனாவுக்கு திரு லீ பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதன்முறை.

சிங்கப்பூர் பிரதமராக இருந்த 20 ஆண்டு காலத்தில், சீனாவுக்கு திரு லீ 14 முறை சென்றிருந்தார். அதன்படி, சீனாவுக்கு ஆக அதிகமான முறை சென்று வந்த வெளிநாட்டுத் தலைவர்களில் ஒருவராக திரு லீ விளங்குகிறார்.

திரு லீ, திரு ஸி இருவரும் அளவளாவிக்கொண்டு, டயாயூடாய் அரசாங்க விருந்தினர் மாளிகைக்குள் (Diaoyutai State Guesthouse) நுழைந்தனர். சுசோவ் நகரிலிருந்து பெய்ஜிங்கிற்கு அதிவிரைவு ரயிலில் தாம் நான்கு மணி நேரம் பயணம் செய்ததாக திரு ஸியிடம் திரு லீ கூறினார்.

“மிகவும் சௌகரியமாகவும் மிகவும் வசதியாகவும் இருந்தது,” என்று மாண்டரின் மொழியில் திரு ஸியிடம் திரு லீ சொன்னார்.

திரு லீயைச் சந்தித்ததில் தாம் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறிய திரு ஸி, “கடந்த காலத்தில் நாம் அடிக்கடி சந்தித்தோம்,” என்றார்.

மூத்த அமைச்சர் பதவியில் திரு லீயை வரவேற்ற திரு ஸி, “உலக அளவிலும் ஆசியாவிலும், நீங்கள் அனுபவமிக்க அரசியல் தலைவராகக் கருதப்படுகிறீர்,” எனச் சொன்னார்.

சிங்கப்பூர் பெற்றிருக்கும் சாதனைகளாக இருக்கட்டும், அனைத்துலக அல்லது வட்டார ஒத்துழைப்புக்கு சிங்கப்பூரின் பங்காக இருக்கட்டும், திரு லீ முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளதாக திரு ஸி கூறினார்.

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற தலைமைத்துவ மாற்றம் குறித்து திரு லீக்கு திரு ஸி வாழ்த்து தெரிவித்தார்.

“நீங்கள் சீன மக்களின் பழைய நண்பர், நல்ல நண்பர். சீனா-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கும் நலனுக்கும் நீங்கள் நீண்டகால ஆதரவு தந்துள்ளீர்,” என்றார் திரு ஸி.

ஜியாங்சு மாநிலம், சுசோவ் நகரில் திரு லீ தமது சீனப் பயணத்தைத் தொடங்கினார். சீனாவில் மூத்த அமைச்சர் லீக்கு அதிபர் ஸி விருந்து உபசரிப்பு வழங்குவது இதுவே முதன்முறை.

கடைசியாக திரு லீயும் திரு ஸியும் சந்தித்திருந்தது, 2023 மார்ச் மாதம் திரு லீ சீனாவுக்குச் சென்றிருந்தபோதே. திரு லாரன்ஸ் வோங், கூடிய விரைவில் சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்பார் என்பதை சீனத் தலைவர்களிடம் தெரியப்படுத்த அந்தப் பயணம் திரு லீக்கு நல்வாய்ப்பாக இருந்தது.

திரு வோங், பிரதமர் பதவியேற்ற பின் சீனாவுக்கு இன்னும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலும், பெரு தலைநகர் லிமாவில் அண்மையில் நடந்த ஏபெக் கூட்டத்திற்கு இடையே திரு ஸியைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

நீங்கள் சீன மக்களின் பழைய நண்பர், நல்ல நண்பர். சீனா-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கும் நலனுக்கும் நீங்கள் நீண்டகால ஆதரவு தந்துள்ளீர்.
மூத்த அமைச்சர் லீ குறித்து சீன அதிபர் ஸி
குறிப்புச் சொற்கள்