செப்டம்பர் 2026 வரை, குடும்ப வன்முறை தொடர்பில் 5,862 சம்பவங்கள்

செப்டம்பர் 2026 வரை, குடும்ப வன்முறை தொடர்பில் 5,862 சம்பவங்கள்

படம்: த ஸ்டார்

05 Nov 2026 - 5:17 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய அரச காவல்துறை, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 5,862 குடும்ப வன்முறைச் சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. இது, இந்த விவகாரத்திற்குத் தொடர்ந்து தீவிர கவனமும், பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் தேவை என்பதை உணர்த்துகிறது.

மலேசியாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் 2024ஆம் ஆண்டில் 7,116லிருந்து 3.9 விழுக்காடு அதிகரித்து, 2025ஆம் ஆண்டில் 7,391ஆக உயர்ந்துள்ளதாக பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி தெரிவித்தார்.

“இப்புள்ளிவிவரங்கள் ஒவ்வொன்றிலும் தனிநபர்களும் குடும்பங்களும் உள்ளனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். இவர்களுக்குப் பாதுகாப்பு, ஆதரவு, மறுவாழ்வு தேவைப்படுகிறது,” என்று அவர் வியாழக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற ‘குடும்ப வன்முறை யதார்த்தத்தைச் சமாளிப்பதற்கான கொள்கைகளை வலுப்படுத்துதல்: சவால்களை எதிர்கொள்ளுதல், குடும்ப அமைப்புகளை வலுப்படுத்துதல்’ குறித்த கருத்தரங்கில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

குடும்ப வன்முறை என்பது உடல்ரீதியான காயங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல, மாறாக உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல், பாலியல் வன்முறை, அச்சுறுத்தல்கள், சிறைவைத்தல் அல்லது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், சொத்து சேதம், நிதி ரீதியான கட்டுப்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

மின்னிலக்கத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு, துன்புறுத்தல், அச்சுறுத்தல் போன்ற புதிய வகை வன்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளன என்றும் இவை பாதிக்கப்பட்டவர்கள் மீது நீண்டகால உணர்ச்சி, உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

எனவே, ஒரு சம்பவம் நடந்த பிறகு பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தடுப்பு, ஆரம்பகாலத் தலையீடு, மறுவாழ்வு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறையுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மக்கள் தொகை மாற்றங்கள், அதிகரித்து வரும் சமூக அபாயங்கள், வேலை, குடும்ப வாழ்க்கைக்கு இடையிலான சமநிலையின்மை, மனநலச் சிக்கல்கள், மின்னிலக்கத் தொழில்நுட்ப வளர்ச்சி, மேலும் சிக்கலானதாக மாறிவரும் குடும்பச் சூழல்கள் ஆகியவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக, ‘தேசிய குடும்பக் கருணை கொள்கை 2026-2030’ அறிமுகப்படுத்தப்பட்டதாக திருவாட்டி நான்சி தெரிவித்தார்.

“குடும்ப வன்முறை என்பது ஒரு தேசியப் பிரச்சினை. இதற்கு அமைச்சுகள், அரசு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் ஒருங்கிணைந்த செயல்பாடும், குழுப்பணியும், கூட்டு ஒத்துழைப்பும் தேவை,” என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
வன்முறைஉளவியல்துன்புறுத்தல்