பேங்காக்: தாய்லாந்துக்கு வந்து செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இவ்வாண்டில் இதுவரை 22 மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு வந்ததாக அந்நாட்டின் சுற்றுப்பயண, விளையாட்டுத் துறையின் நிரந்தரச் செயலாளர் நட்ரீயா தாவீவோங் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7 வரையிலான சுற்றுப் பயண புள்ளிவரங்களை அவர் அளித்துள்ளார்.
22 மில்லியன் வருகையாளர்கள் மூலம் தாய்லாந்து அரசாங்கத்துக்கு 1.037 டிரில்லியன் பாட் (S$41.9 பில்லியன்) வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மொத்தச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் ஐந்து நாடுகளைச் சேர்ந்தோரே ஆக அதிகம்.
அவர்கள் சீனா, மலேசியா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்த செப்டம்பர் மாதத்தில் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் 508,341 வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு வந்தனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 72,620 பேர் வருகையளித்தனர். இது இதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் 0.44 விழுக்காடு அதிகம்.
மேலும் அந்த ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் இருந்து அதிகமானோர் தாய்லாந்துக்கு சுற்றுப் பயணமாகச் சென்றிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முந்திய வாரத்தைக் காட்டிலும் சிங்கப்பூர் பயணிகளின் எண்ணிக்கை 47.27 விழுக்காடு அதிகரித்தது.
அதற்கு, சிங்கப்பூரின் பள்ளி விடுமுறைக் காலம் முக்கியக் காரணம்.
இதன் மூலம் தாய்லாந்தின் வாராந்தர சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையின் முதல் ஐந்து இடங்களில் சிங்கப்பூரும் இடம்பெற்றது.