பெல்கிரேட்: செர்பியாவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற தேர்தலில், மாணவர்கள் தலைமையிலான எதிர்ப்பு இயக்கத்திடம் தோல்வியுற்றதை அந்நாட்டுத் தலைவர் அலெக்சாண்டர் வுசிச் தமது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் செர்பியாவில் பல ஆண்டுகளாக நீடித்துவந்த அவரது ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளது. மக்களிடையே செல்வாக்குப் பெற்ற தேசியவாதத் தலைவரான திரு வுசிச், 2014ஆம் ஆண்டு முதல் பிரதமராகவோ அதிபராகவோ அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
முதற்கட்டத் தேர்தல் முடிவுகளின்படி, மொத்தம் 250 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மாணவர் அணி 135 முதல் 140 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தனது செர்பிய முற்போக்குக் கட்சி 105 இடங்களைப் பெறும் என்றும் திரு வுசிச் தெரிவித்தார்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டில் நோவி சாட் நகரில் உள்ள ரயில் நிலையக் கூரை இடிந்துவிழுந்து 16 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மேலோங்கி வந்த சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மாணவர்கள் திரண்டு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அங்கு திடீர்த் தேர்தலைத் திரு வுசிச் அறிவித்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைநகர் பெல்கிரேடின் தெருக்களில் மக்கள் திரண்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
