பேங்காக்: தாய்லாந்தின் தென்மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) அதிகாலை நாற்பது நிமிடங்களில் நடந்த பல தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் தென் பகுதிகளில், குறிப்பாக மலேசிய எல்லையில் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி நடந்துவருகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் நடந்துவரும் ஆயுதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வட்டாரத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஆட்சியில் அதிகப் பங்கைக் கோரி போராடிவருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடந்ததும் தென்மாவட்டங்களில் இயங்கும் 11 பெட்ரோல் நிலையங்களில் தொடர்ந்து பல குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. நாராதிவாட், பட்டானி, யாலா ஆகிய பகுதிகளில் அவை நடந்ததாக ராணுவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அவற்றை யார் வெடிக்கச் செய்தனர் என்பதையும் எவரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதையும் ராணுவம் தெரிவிக்கவில்லை.
“குண்டுவெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. அடையாளம் தெரியாத ஆடவர்கள், குழுவாக வந்து அந்தக் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். பெட்ரோல் ‘பம்ப்’ குழாய்கள் சேதமடைந்துள்ளன. ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளார்,” என்று நாராதிவாட் நகர ஆளுநர் பூன்சாவ் ஹொம்யம்யென் உள்ளூர் ஊடகத்திடம் கூறினார்.
பட்டானி மாவட்டத்தில் ஒரு தீயணைப்பாளரும் இரண்டு பெட்ரோல் நிலையப் பணியாளர்களும் காயமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கடுமையான காயங்களின்றி அந்த நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடப்பதை எதிர்ப்பதற்காக இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகத் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குன் கூறியுள்ளார். இது கிளர்ச்சிக்கான அறிகுறியல்ல என்று அவர் கருத்துரைத்தார்.
சாலைச் சோதனைச்சாவடிகள், எல்லையோரங்கள் உள்பட அனைத்து வட்டாரங்களிலும் பாதுகாப்பை ஆக உயரிய நிலையில் வைத்திருக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளதாகத் தென்பகுதியின் ராணுவத் தளபதி நாராதிப் போய்நொக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நூறாண்டுகளுக்கு மேல் நாட்டின் தென்பகுதியை பௌத்த பெரும்பான்மை நாடான தாய்லாந்து அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அந்நாடு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு பணிகளில் அமர்த்தப்பட்டு, கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அவ்வப்போது ஆளாகிவருகின்றனர்.

