பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வசிக்கும் ஏழு உடன்பிறப்புகள், தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அடையாள ஆவணங்கள், கல்வி அல்லது எதிர்காலம் குறித்து தெரியாத நிலையில் கழித்தனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) அந்த நீண்ட அத்தியாயம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. தேசிய பதிவுத் துறையிடமிருந்து அன்றைய தினம் இவர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டனர்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், கோம்பாக் மாவட்டத்தில் உள்ள சிற்றூரான ரவாங்கில் இருக்கும் இவர்களின் வீட்டிற்குச் சென்ற தேசிய பதிவுத் துறை தலைமை இயக்குநர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ், இவர்களிடம் அடையாள அட்டைகளை வழங்கினார்.
இப்போது இந்த உடன்பிறப்புகளிடம் முறையான அடையாள ஆவணம் இருப்பதால் இவர்களால் சுதந்திரமாகப் பயணம் செய்யவும் கல்வி பயிலவும் எந்தவொரு பயமுமின்றி வேலை தேடவும் முடியும். இந்த உடன்பிறப்புகள் 16 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தம் உடன்பிறப்புகளின் சார்பாகப் பேசிய நூர் ஹகிக்கா இஸ்மாயில், 23, தங்களின் வளரும் பருவத்தைக் கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார்.
“கிராமத்தில் வளர்ந்த எங்களில் எவரும் பள்ளிக்குச் சென்றதில்லை. கல்வி, முறையான ஆவணங்களின்றி தினந்தோறும் எங்கள் பொழுதைக் கழித்து வந்தோம்,” என்று சொன்ன இவர், தங்கள் வாழ்க்கை எப்போதும் ஒரு மாதிரியாக இருந்ததாகக் கூறினார்.
“எங்களிடம் பிறப்புச் சான்றிதழோ அடையாள அட்டையோ இல்லாததால் நாங்கள் பயத்திலேயே வாழ்ந்தோம். ஆனால், அதிகாரிகளால் நாங்கள் பிடிபட்டதில்லை.
“நாங்கள் சென்ற இடங்கள் அனைத்திலும் எல்லா விதமான அவமானங்களைச் சந்தித்தோம். எங்களின் பின்னணி குறித்து கேள்வி எழுப்பிய பலரும், நாங்கள் பள்ளிக்குச் செல்லாதது குறித்து வினவினர். அதுமட்டுமல்லாமல், எங்களின் சாபா தந்தை பற்றியும் இந்தோனீசிய தாயார் பற்றியும் பலவித கருத்துகளைக் கூறி வந்தனர்,” என்றார் நூர் ஹகிக்கா.
தொடர்புடைய செய்திகள்
முறையான கல்வி பயில முடியாத இந்த உடன்பிறப்புகள், தொலைக்காட்சி பார்த்து அடிப்படையில் வாசிக்கவும் எழுதவும் சொந்தமாகக் கற்றுக்கொண்டனர். தங்களைச் சுற்றியுள்ளவர்களின் உரையாடல்களைச் செவிமடுத்தும் அறிவை வளர்த்துக்கொண்டனர்.
மற்றொரு சகோதரியான நூர் ஷக்கிலா, 19, ஒருநாள் பள்ளிக்குச் செல்ல இன்னமும் கனவு காண்கிறார்.
“அடிப்படைக் கல்வி கற்க இப்போது தாமதமாகிவிட்டதாகத் தோன்றினாலும், நான் பயில இன்னமும் ஆசைப்படுகிறேன். மருத்துவராகவோ, செய்தி வாசிப்பவராகவோ, சமையல் வல்லுநராகவோ ஒரு தடவை கனவு கண்டேன். நான் இன்னமும் இதுகுறித்து ஆராய்ந்து வருகிறேன். நான் விரும்பும் துறையில் சேர வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார் இவர்.
உடன்பிறப்புகளில் இரண்டாவது மூத்தவரான முகம்மது ஃபஸ்ரில், 28, அடையாள அட்டையைப் பெற்றிருப்பது புதிய கதவுகளைத் திறந்துள்ளதாகக் கூறினார்.
“ஒருவழியாக முறையான ஆவணம் கிடைத்துள்ளதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். இப்போது என்னால் முறையாக வேலைக்கு விண்ணப்பிக்க இயலும்,” என்றார் இவர்.
இந்த உடன்பிறப்புகளின் நிலைமை குறித்து விளக்கிய திரு பட்ருல் ஹிஷாம், பதிவுசெய்யப்படாத திருமணங்களால் இத்தகைய சூழ்நிலைகள் எழுவதாகச் சொன்னார்.
“பெற்றோர் தங்கள் திருமணங்களைப் பதிவுசெய்யாவிட்டால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஏற்படும் பின்விளைவுகள் இதுவே,” என்று கூறிய அவர், நாடற்றவர்களின் நிலைமை குறித்து ஊடகங்களுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் தெரியவந்தால் தேசிய பதிவுத் துறைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த உடன்பிறப்புகளின் நிலவரம் குறித்து தமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, பதிவுத் துறை விசாரணையைத் தொடங்கியதாக திரு பட்ருல் ஹிஷாம் தெரிவித்தார்.
“இவர்களின் பெற்றோரின் திருமணம் பதிவுசெய்யப்படவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஏழு பிள்ளைகளும் இவர்களின் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்த மரபணுச் சோதனை நடத்தப்பட்டது,” என்றார் அவர்.
2023 செப்டம்பரில் இவர்களின் தந்தை இறந்துவிட்டதால், மரபணு சரிபார்ப்பு முறையை நிறைவுசெய்ய அவருக்கு நெருங்கிய சொந்தத்தை பதிவுத் துறை தேடியது.
தேசிய பதிவுத் துறையின்படி, இவர்களின் பெற்றோரின் திருமணம் 2023 டிசம்பரில் செல்லுபடியாக்கப்பட்டது. அதே மாதம் இந்த உடன்பிறப்புகளின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கு வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில், பிறப்புகள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமாறு திரு பட்ருல் ஹிஷாம் மலேசியர்களுக்கு நினைவூட்டினார். அவ்வாறு செய்யத் தவறினால், தகுதியுடைய குடிமக்கள் தங்கள் உரிமைகளையும் அனுகூலங்களையும் தவறவிடும் சாத்தியம் ஏற்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

