பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து எழுவர் மாண்டுபோயினர்; 16 பேர் காயமுற்றனர்.
இவ்விபத்து சனிக்கிழமை (மார்ச் 15) அதிகாலை 2 மணியளவில் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
டாவ் கனோங் விரைவுச்சாலைப் பாலத்தின் இடிபாடுகளில் கிட்டத்தட்ட 30 பேர் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களைத் தேடி, மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது.
புதிய பாலத்தில் கட்டப்பட்டுவந்த கான்கிரீட் உத்தரம் இடிந்து, இப்போதுள்ள பாலத்தின்மீது விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அதனை ஒட்டிய கட்டுமானங்கள் இடிந்து விழுந்து நிலைமை மேலும் சிக்கலாகிவிடக்கூடாது என்பதால், மீட்புப் பணிகளை அதிகாரிகள் கவனமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கு ஏதுவாக, அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024 நவம்பரில் அந்த உயர்த்தப்பட்ட விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்து போன்றே இப்போதும் நிகழ்ந்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கான்கிரீட் உத்தரங்களைத் தாங்கக்கூடி பெரிய எஃகுக் கட்டுமானமே அவ்விரு விபத்துகளுக்கும் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

