தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா பள்ளி, பள்ளிவாசல் மீது தாக்குதல்; பலர் மரணம்

1 mins read
5b217b44-2d06-44a2-add2-56b061b2254b
காஸா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடையவுள்ளது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

காஸா: காஸாவில் வீடுகளிலிருந்து வெளியேருவோருக்கு அடைக்கலம் கொடுக்கும் பள்ளி, பள்ளிவாசல் மீது இஸ்ரேல் ஆகாயத் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.

அச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) காலை நிகழ்ந்தது. ஹமாஸ் அமைப்பு நடத்தும் காஸா அரசாங்கத்தின் ஊடகப் பிரிவு அலுவலகம் இத்தகவல்களை வெளியிட்டது.

மத்திய காஸாவில் அல்-அக்சா மருத்துவமனைக்கு அருகே உள்ள பள்ளிவாசல், பள்ளி மீது ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. டெயர் அல் பலா பகுதியில் உள்ள இபுன் ரு‌ஷ்ட் பள்ளி, ‌ஷுஹாதா அல்-அக்சா பள்ளிவாசல் ஆகியவற்றில் ஹமாஸ் அமைப்பினர் இயங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர்களைக் குறிவைத்துத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு எதிர்பாரா வகையில் தென் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதில் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

அதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸா மீது போர் தொடுத்தது. போரில் கிட்டத்தட்ட 42,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதோடு, காஸாவில் வசித்த 2.3 மில்லியன் மக்கள் கிட்டத்தட்ட அனைவருமே வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்