ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் கிரேன்ஸ் மோன்டானா நகரிலுள்ள சொகுசு ஆல்பைன் ஸ்கீ விடுதி ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமுற்றதாகவும் அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு பிறந்த 1.30 மணி நேரத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது.
மாண்டவர்கள் எத்தனை பேர் என்பதை உறுதிசெய்ய மறுத்த காவல்துறைப் பேச்சாளர் ஒருவர், ஆயினும் பலர் தீக்காயங்களுக்காகச் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாகக் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மீட்புப் படையினர் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்று காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.
“வெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை,” என்று காவல்துறைப் பேச்சாளர் கேட்டன் லத்தியன் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்ற ‘ல கான்ஸ்டலேஷன்’ என்ற மதுக்கூடத்தில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகப் பலர் திரண்டிருந்தபோது வெடிப்பு நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் அவர் சொன்னார்.
சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்ட படங்கள் ஒரு கட்டடம் பற்றியெரிவதையும் அலறியடித்தபடி மக்கள் ஓடுவதையும் காட்டின.
வெடிப்பு நிகழ்ந்தபோது அந்த மதுக்கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாக சுவிட்சர்லாந்தின் ‘பிலிக்’ ஊடகச் செய்தி கூறுகிறது.
கிட்டத்தட்ட 40 பேர் மாண்டுபோனதாகவும் நூறு பேர் காயமடைந்திருப்பதாகவும் ‘ல நூவெலிஸ்ட்’ எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இசை நிகழ்ச்சியில் வாணவேடிக்கைகள் பயன்படுத்தப்பட்டபோது தீப்பற்றியிருக்கலாம் என்றும் சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்பு நிகழ்ந்த பல மணி நேரத்திற்குப் பிறகும் அப்பகுதியில் பல அவசர மருத்துவ வாகனங்களைக் காண முடிந்ததாக ஏஎஃப்பி புகைப்படச் செய்தியாளர் குறிப்பிட்டார்.
தீப்பிடித்து எரிந்த மதுக்கூடம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது என்று பிபிசி செய்தி தெரிவித்தது.
இதனிடையே, பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில், சம்பவம் நிகழ்ந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு முழுவதும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அத்துடன், கிரேன்ஸ் மோன்டானா வான்வெளியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

