ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் கிரேன்ஸ் மான்டெனா நகரிலுள்ள சொகுசு ஆல்பைன் ஸ்கீ விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 100 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு பிறந்த 1.30 மணி நேரத்தில் தீ விபத்து நேர்ந்ததாகச் சொல்லப்பட்டது. அதற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றபோதும், தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இப்போதைக்கு, இது தீ விபத்து என்றே கருதுகிறோம். இதனை ஒரு தாக்குதலாகக் கருதவில்லை,” என பீட்ரிஸ் பிலோட் என்ற அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்ற ‘ல கான்ஸ்டலேஷன்’ மதுக்கூடத்தில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகப் பலர் திரண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் கேட்டன் லத்தியன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டத் தகவல்களின்படி, குறைந்தது இரு பிரெஞ்சுக் குடிமக்கள் காயமுற்றதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாகக் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மீட்புப் படையினர் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்று காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.
சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்ட படங்கள் ஒரு கட்டடம் பற்றியெரிவதையும் அலறியடித்தபடி மக்கள் ஓடுவதையும் காட்டின. தீ விபத்து நேர்ந்தபோது அந்த மதுக்கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாக சுவிட்சர்லாந்தின் ‘பிலிக்’ ஊடகச் செய்தி கூறுகிறது.
இசை நிகழ்ச்சியில் வாணவேடிக்கைகள் பயன்படுத்தப்பட்டபோது தீப்பற்றியிருக்கலாம் என்றும் சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்திற்குப் பல மணி நேரத்திற்குப் பிறகும் அப்பகுதியில் பல அவசர மருத்துவ வாகனங்களைக் காண முடிந்ததாக ஏஎஃப்பி புகைப்படச் செய்தியாளர் குறிப்பிட்டார்.
பத்து ஹெலிகாப்டர்களும் 40 அவசர மருத்துவ வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தீப்பிடித்து எரிந்த மதுக்கூடம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது என்று பிபிசி செய்தி தெரிவித்தது.
இதனிடையே, பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில், சம்பவம் நிகழ்ந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு முழுவதும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அத்துடன், கிரேன்ஸ் மோன்டானா வான்வெளியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

