மட்ரிட்: ஐரோப்பாவின் தென்பகுதியில் உள்ள பல பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது மூவர் மாண்டுவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.
இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ‘பால்கன்’ நாடுகள் ஆகியவற்றில் உள்ள பல பகுதிகளில் வெப்பம் குறித்து உயர் விழிப்புநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெப்பநிலை 40 டிகிரி செல்சியசையும் தாண்டிவிட்டதால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள மக்களின் உடல் ஆரோக்கியம் பேரளவில் பாதிப்படையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவியா, கோர்டோபா ஆகிய நகரங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்று ஸ்பெயினின் வானிலைச் சேவை தெரிவித்தது.
போர்ச்சுகலின் தெற்குப் பகுதியிலும் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள குதிரைச் சவாரி நிலைய ஊழியர் ஒருவர் காட்டுத்தீ காரணமாக மாண்டார்.
மணிக்கு 70 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசும் பலத்த காற்று காட்டுத்தீயை வீடுகள் உள்ள பகுதிகளுக்குப் பரவச் செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
காட்டுத்தீயை அணைக்க மீட்புப் பணியாளர்கள் அயராது உழைத்து வருவதாக ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 12) தெரிவித்தார்.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கவனமாக இருக்கும்படி அவர் எக்ஸ் தளத்தில் கேட்டுக்கொண்டார்.
ஸ்பெயினின் தென்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளமான தரிஃபாவில் உள்ள ஹோட்டல்கள், வீடுகளிலிருந்து ஏறத்தாழ 2,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத்தீயை அணைக்க கிட்டத்தட்ட 1,000 ராணுவ வீரர்களை ஸ்பெயின் பணியமர்த்தியுள்ளது.