ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் பிரதான ரயில் சேவையில் பாலியல் தொல்லை விளைவிப்போருக்கு ரயிலில் பயணம் செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் முறையற்ற நடவடிக்கை தொடர்பாகப் பல புகார்கள் எழுந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும்மல்லாது, மகளிர் மட்டும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கேசிஐ ரயில் சேவை பரிசீலனை செய்து வருகிறது.
தலைநகர் ஜகார்த்தாவிலும் அதைச் சுற்றியுள்ள போகோர், டெபோக், தெந்காராங், பெகாசி ஆகிய பகுதிகளிலும் உள்ள கேஆர்எல் ரயில் பாதையில் செல்லும் ரயில்களில் பாலியல் தொல்லை விளைவிப்போருக்குத் தடை விதிக்கப்படும் என்று செப்டம்பர் 8ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் சேவையை நாள்தோறும் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடையிலான காலகட்டத்தில் ரயில்களிலும் ரயில் நிலையத்திலும் நடந்த 30 பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்தத் தகவலை கேசிஎல் ரயில் சேவை வெளியிட்டது.
அத்துடன், அதே காலகட்டத்தில் இப்பிரச்சினை குறித்து சமூக ஊடகத்தில் 13 புகார்கள் செய்யப்பட்டன.

