தைவானைத் தனக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்காவைச் சீனா எச்சரித்துள்ளது. ஷங்ரி-லா மாநாட்டில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறிய கருத்துக்கு சீனா பதிலளித்தது.
“சீனாவை எதிர்க்க தைவானைப் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்கா ஒருபோதும் கற்பனை செய்யக்கூடாது,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அறிக்கை வெளியிட்டார். தைவான் குறித்த விவகாரத்தில் அமெரிக்கா நெருப்புடன் விளையாடவேண்டாம் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியத் தற்காப்பு மாநாட்டில் திரு ஹெக்செத் ஆற்றிய உரைக்கு நேரடி பதிலாக சீனாவின் அறிக்கை இடம்பெற்றிருந்தது.
சீனா ராணுவப் பலத்தைப் பயன்படுத்த தயாராகிக்கொண்டிருப்பதாகவும் வட்டார நட்பு நாடுகள் அவற்றின் தற்காப்பு செலவினங்களை உயர்த்தும்படியும் திரு ஹெக்செத் தமது உரையில் கூறினார்.
சீனா விடுக்கும் மிரட்டல் உண்மையானது என்றும் அது உடனடியானது என்றும் சொன்ன திரு ஹெக்செத், தைவான் நீரிணையிலும் தென் சீனக் கடலிலும் சீனாவின் நடவடிக்கைகளைக் குறைகூறினார்.
அதற்குப் பதிலளித்த சீனா, அமெரிக்கா பதற்றத்தை அதிகரிக்கிறது என்றும் வட்டாரத்தின் அமைதியைக் கீழறுப்பதாகவும் சாடியது.
தென் சீனக் கடலில் அமெரிக்கா தலையிடுவதைக் குறிப்பிட்ட சீனா, உலக நாடுகளில் அமெரிக்காவே மேலாதிக்க நாடு என்றது.
தைவான் விவகாரம் முழுமு ழுக்க சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்று வலியுறுத்திய சீனா, தைவான் சுதந்திர சக்திகளுக்கான ஆதரவை நிறுத்தும்படி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சீனா இவ்வாண்டு ஷங்ரிலா மாநாட்டுக்குத் தற்காப்பு அமைச்சர் டொங் ஜுன்னை அனுப்பவில்லை. 2019ஆம் ஆண்டுக்குப் பின் அது இவ்வாறு நடந்துகொள்வது இது முதன்முறை.