டாக்கா: பங்ளாதேஷில் ‘பாரிசல் ஷெர்-இ-பங்ளா’ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் தீ மூண்டது. தீயணைப்புச் சேவையின் ஒன்பது பிரிவுகள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன.
“தீச்சம்பவம் பற்றி புகார் கிடைத்ததும், நாங்கள் காலை 9.10 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்தோம். மருத்துவமனையின் அறை ஒன்றில் தீ மூண்டது,” என்று ‘பாரிசல் பிரிவுத் தீயணைப்புச் சேவை’யின் துணை இயக்குநர் மிஸானுர் ரஹ்மான் கூறினார்.
ஆவணங்களும் மருந்துகளும் தீயில் எரிந்துபோயின. நிலைமைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது உறுதிசெய்யப்படும் என்று மருத்துவமனையின் உதவி இயக்குநர் டாக்டர் மஹ்முத் தெரிவித்தார்.
கீழ்த்தளத்தில் உள்ள அறை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவால் தீ மூண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அங்கிருந்த மெத்தைகள் தீப்பிடித்து, தீ மிக விரைவில் பரவியதாகவும் அதிக அளவில் புகை கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“நிலைமையைச் சரிசெய்யும் பணிகள் நிறைவுபெற்றதும், நாங்கள் தகுந்த விவரங்களை வழங்குவோம்,” என்று தீயணைப்புச் சேவையின் உதவி இயக்குநர் பிலால் ஹுசைன் கூறினார்.