நியூ ஓர்லீன்ஸ்: அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இரு கப்பல்கள் ஒன்றோடு ஒன்றோடு மோதிக்கொண்டன.
அக்கப்பல்களில் ஒன்று சொகுசுக் கப்பலாகும். அந்தக் கப்பலில் இருந்த கிட்டத்தட்ட 130 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்
இவ்விபத்தால் லேசான காயங்கள் ஏற்பட்ட 32 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். யாரும் காணாமற்போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஹெரிட்டேஜ் என்ற பெயரைக் கொண்ட சொகுசுக் கப்பல், விபத்தால் மிசிசிப்பி ஆற்றில் ஒரு பக்கமாகக் கவிழ்ந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) அதன்மீது அட்லான்டிக் அஸ்ஃபால்ட் எனும் சரக்குக் கப்பல் மோதியது.
இச்சம்பவத்தை ‘மிசிசிப்பியில் நிகழ்ந்த பேரதிசயம்’ (miracle on the Mississippi) என்று அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை
ஆகக் கடைசி நிலவரப்படி, விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அமெரிக்கக் கரையோரக் காவற்படை கேப்டன் மெலனி பர்ன்ஹம் கூறினார். கப்பலைச் செலுத்தும்போது கட்டுப்பாடு இழக்கப்பட்டிருப்பதுபோல் தெரிவதாகவும் அவர் சொன்னார்.
விபத்து குறித்து உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிளிவில் தகவல் வந்தது. அப்போது கப்பல் பயணிகளுக்கும் உதவும் முயற்சிகளை மக்கள் மேற்கொண்டுவந்தனர் என்று நியூ ஓர்லீன்ஸ் துறைமுகத் தலைவர் மெலனி மொன்ட்ரோல் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
எட்டு நாள் பயணத்தின் இறுதிக் கட்டம்.
அமெரிக்கன் ஹெரிட்டேஜ் சொகுசுக் கப்பல், மிசிசிப்பி ஆற்றில் அமைந்துள்ள பகுதிகளுக்கு மேற்கொண்ட எட்டு நாள் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தது.
நீரில் விழுந்த பல பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது. காணாமற்போயிருந்த பயணிகளை மீட்பதற்குத் தங்களிடம் இருந்த எல்லா வளங்களையும் பயன்படுத்துவதாகவும் மாநில அதிகாரிகளுடன் இணைந்துப் பணியாற்றி வருவதாகவும் அமெரிக்க உள்துறை அமைச்சின் செயலாளர் மார்க்வேன் மல்லின் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கன் ஹெரிட்டேஜ் சொகுசுக் கப்பல், 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் அது அதிகபட்சமாக 150 பேரைக் கொண்டிருக்கக்கூடும் என்று அதை நடத்தும் அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் நிறுவன இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கரையோரக் காவற்படை அதகிாரிகளுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் மின்னஞ்சல் மூலம் கூறியிருந்தது. அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
