மத்திய கிழக்கில் எரிபொருளை ஏற்றிக்கொண்டு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கப்பல்கள் சனிக்கிழமை (மே 23) பயணம் மேற்கொண்டுள்ளன.
இயற்கை திரவ எரிவாயுவுடன் (எல்பிஜி) பாகிஸ்தானுக்கு ஒரு கப்பலும், ஈராக்கிலிருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய்யுடன் சீனாவுக்கு ஒரு பெருங்கப்பலும் சென்றுகொண்டிருக்கின்றன. அவை மூன்று மாதங்களாக நீரிணையில் சிக்கித் தவித்தன.
நீரிணையின் வழியாக உலகின் மொத்த எரிசக்தி விநியோகத்தின் ஐந்தில் ஒரு பங்கு பல நாடுகளைச் சென்றடைகிறது. எனவே பிப்ரவரி மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் ஈரானைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து அந்த நீரிணை கப்பல் போக்குவரத்து இன்றி முற்றிலும் முடங்கிப்போனது.
குறிப்பிட்ட அளவிலான மிகப் பெரிய கப்பல்களைத் தனிப்பட்ட வழியில் நீரிணையைக் கடந்து செல்ல ஈரான் இம்மாதம் அனுமதி அளித்தது. அதன்படி, அந்த இரு கப்பல்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.
கடந்த வாரம் மூன்று மாபெரும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் சீனாவுக்கும் தென்கொரியாவுக்கும் சென்றன. அவற்றில் ஆறு மில்லியன் பீப்பாய்கள் அளவு கச்சா எண்ணெய் இருந்தது.
போர் தொடங்கும் முன், ஹோர்முஸ் நீரிணையை ஏறத்தாழ 125 முதல் 140 கப்பல்கள் அன்றாடும் கடந்து சென்றன. தற்போதைய நிலவரப்படி 20,000க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் மத்திய கிழக்கில் நூற்றுக்கணக்கான தேங்கி நிற்கும் கப்பல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

