ஃபுளோரிடா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச் சூடு; 11 பேர் காயம்

ஃபுளோரிடா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச் சூடு; 11 பேர் காயம்

படம்: ஃபுளோரிடா விவசாய, இயந்திரவியல் பல்கலைக்கழகம்

25 Oct 2026 - 7:40 pm

2 mins read

ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் சனிக்கிழமை (அக்டோபர் 24) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 11 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும், மற்றொருவர் பிற வகையிலும் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபுளோரிடா விவசாய, இயந்திரவியல் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

அதே வேளையில், காயமடைந்தவர்களில் ஆறு பெரியவர்களும் ஆறு சிறாரும் அடங்குவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

“துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

“மற்ற ஒன்பது பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்னதாக அங்கு சண்டை நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட காவல்துறையினர், அதுகுறித்த விரிவான விளக்கங்களை அளிக்கவில்லை.

”காயமடைந்தவர்களில் சிறாரும் அடங்குவர் என்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது,” என்று காவல்துறைத் தலைவர் லாரன்ஸ் ரெவெல் தெரிவித்தார்.

குண்டடிபட்டுக் காயமடைந்தவர்களில் மிக இளையவருக்கு 11 வயது என்று ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்தது.

இருப்பினும், இதுகுறித்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் விளக்கக் கோரிக்கைக்குக் காவல்துறை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் கொண்டாட்ட விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, துப்பாக்கிச்சூடாக மாறியதாகவும் இரண்டு அல்லது மூவருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இரவு 8 மணிக்குச் சற்று முன்பாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அந்நாளிதழ் மேலும் குறிப்பிட்டது.

சம்பவம் நிகழ்ந்ததற்கான சூழல்கள் குறித்துத் தங்களின் கடுமையான குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காபல்கலைக்கழகம்துப்பாக்கிச்சூடு