விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சத்தம்; அவசரமாக வெளியேற்றப்பட்ட டிரம்ப்

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சத்தம்; அவசரமாக வெளியேற்றப்பட்ட டிரம்ப்

2 mins read
4ce3a4b7-5f21-441a-8da4-29452d851467
வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபரான கோல் தோமஸ் ஆலனை, சட்ட அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் திடீரென பலத்த சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரது மனைவி மெலேனியாவும் ரகசிய சேவை அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சனிக்கிழமை இரவு (ஏப்ரல் 25) விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இருவரும் மேடையில் நின்றுகொண்டிருந்தனர்.

அங்கிருந்து வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு “துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்,” என்று ட்ருத் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டார்.

ரகசிய சேவை, சட்ட அமலாக்க அதிகாரிகள் அற்புதமான வேலையைச் செய்துள்ளனர் என்று அவர் பாராட்டினார்.

சட்ட அமலாக்க அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கலிஃபோர்னிாயவைச் சேர்ந்த கோல் டோமஸ் ஆலன் என்பவரை மடக்கி கைது செய்துள்ளது. இந்தப் படத்தின் நம்பகத்தன்மை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சட்ட அமலாக்க அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கலிஃபோர்னிாயவைச் சேர்ந்த கோல் டோமஸ் ஆலன் என்பவரை மடக்கி கைது செய்துள்ளது. இந்தப் படத்தின் நம்பகத்தன்மை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்

முன்னதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட ஓர் அறிக்கையில் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்ப்டடது.

விருந்து நிகழ்ச்சியில் நான்கு முதல் ஆறு வெடிச் சத்தம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன் விருந்தினர்கள் பதற்றமடைந்தனர்.

அங்கு துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் இருந்ததாக சில ஊடகங்கள் தெரிவித்தன.

விருந்தில் பங்கேற்றவர்கள் உடனடியாக பேச்சை நிறுத்திவிட்டு ‘கீழே படுங்கள்’, ‘கீழே படுங்கள்’ என்று உரக்கக் குரல் கொடுத்தனர்.

விருந்து நிகழ்ச்சியில் பலர் தங்களைத் தற்காத்துக் கொள்ள நாற்காலியில் படுத்துக் கொண்டனர்.
விருந்து நிகழ்ச்சியில் பலர் தங்களைத் தற்காத்துக் கொள்ள நாற்காலியில் படுத்துக் கொண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ரகசிய சேவை அதிகாரிகள் அவசரமாக உள்ளே நுழைந்தபோது நூற்றுக்கணக்கானவர்கள் மேசைக்கு அடியிலும் நாற்காலியிலும் படுத்திருந்தனர்.

அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

ஏறக்குறைய 2,600 விருந்தினர்கள் மேசைக்கு அடியிலும் மறைவான இடத்திலும் பதுங்கியிருந்தனர். உணவு பரிமாறும் ஊழியர்கள் உணவுக் கூடத்தின் முன்பகுதிக்கு ஓடிச் சென்று ஒளிந்துகொண்டனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் விருந்து நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலை சுற்றி வளைத்தது. ஹெலிகாப்டர் ஒன்று மேலே வட்டமிட்டது.

திருமதி மெலேனியா மேடையிலிருந்து பாதுகாப்பாக ரகசிய அதிகாரிகளால் வெளியேற்றப்படுவதற்கு சற்று முன்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதைக் கண்டு அவரது முகம் மாறியது. அவர் கவலையடைந்து காணப்பட்டதாக சிஎஸ்பிஏஎன் நேரலை ஒளிபரப்பு கூறியது.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், குண்டு துளைக்காத கவச உடையணிந்து பல ஆயுதங்களுடன் இருந்த சந்தேக நபர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை காயப்படுத்தியிருக்கிறார் என்றார்.

“கொலை செய்ய அஞ்சாத அந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்திற்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது கோல் டோமஸ் ஆலன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பல அமலாக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

சந்தேக நபர்மீது திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்