தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துப்பாக்கிச்சூடு: சந்தேக நபரிடம் சிட்னி காவல்துறை விசாரணை

1 mins read
53fbc022-d532-4365-9f30-ac481b4b2051
சந்தேக நபர் சன்னல் வழியாக 50 முறை சுட்டதாகவும் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ததாகவும் சிட்னி காவல்துறையின் தற்காலிகக் கண்காணிப்பாளர் ஸ்டீவன் பெரி கூறினார். - படம்: பிக்சாபே

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள அடுக்குமாடி வீட்டுச் சன்னல் வழியாகத் துப்பாக்கியால் சுட்டு ஒருவருக்குப் படுகாயம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரிடம் அந்நகரக் காவல்துறையினர் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) இரவு நிகழ்ந்த தாக்குதலில் குறைந்தது ஒருவர் கடுமையாகக் காயம் அடைந்ததாக நம்பப்படுகிறது.

அது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று சிட்னி காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் சன்னல் வழியாக 50 முறை சுட்டதாகவும் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ததாகவும் சிட்னி காவல்துறையின் தற்காலிகக் கண்காணிப்பாளர் ஸ்டீவன் பெரி கூறினார்.

“அதிர்ஷ்டவசமாக யாரும் மரணமடையவில்லை,” என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு பெரி தெரிவித்தார்.

அந்த சந்தேக நபர் மீது ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகவும் திரு பெரி கூறினார்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களில் சந்தேக நபரும் ஒருவரா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

சம்பவ இடத்தில் 14 பேருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்ததாக நியூ சவுத் வேல்ஸ் மாநில ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிர்ச்சி, இலேசான காயங்கள் ஆகியவற்றுக்காக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்