பட்லர் (அமெரிக்கா): அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் பென்சில்வேனியா மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பலமுறை துப்பாக்கிக்சூட்டுச் சத்தம் கேட்டது.
தமது வலக்காதில் சுடப்பட்டதாக திரு டிரம்ப் பின்னர் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது திரு டிரம்ப் வலியுடன் தமது வலது கையால் வலது காதைப் பிடித்துக்கொண்டார். பிறகு கையை இறக்கி ஒலிபெருக்கி இருக்கும் இடத்திற்குப் பின்னால் முட்டி போட்டுக்கொண்டார்.
அப்போது மெய்க்காப்பாளர்கள் அவரைச் சுற்றிக்கொண்டனர். ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அவர் இருந்த மேடையில் பணியில் இறங்கினர். சுமார் ஒரு நிமிடத்துக்குப் பிறகு அவர் எழுந்தார்.
மீண்டு எழுந்த திரு டிரம்ப், கையைக் காற்றில் குத்தியபடி, “போராடுங்கள், போராடுங்கள், போராடுங்கள்,” என்று ஆங்கிலத்தில் கூறியதுபோல் சம்பவம் பதிவான காணொளியில் தெரிந்தது.
காணொளியில் அவரின் வலக்காதிலும் வலக்கன்னத்திலும் ரத்தம் வழிந்ததைக் காண முடிந்தது.
சந்தேக நபராக 20 வயது தாமஸ் மேத்யூ குரூக்ஸ் எனும் ஆடவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அறிக்கை ஒன்றில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது என்று என்பிசி, சிபிஎஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இது, திரு டிரம்ப் மீதான கொலை முயற்சி என்றும் மத்தியப் புலானாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சந்தேக நபர் மாண்டுவிட்டதாகவும் பிரசாரத்தைக் காண வந்த பார்வையாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது. மேலும், இரு பார்வையாளர்கள் காயமுற்றதாகவும் அது குறிப்பிட்டது.
“ஜூலை 13ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லர் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தாக்குதல்காரர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர், பிரசாரப் பகுதிக்கு அப்பால் உயரமான இடத்திலிருந்து பலமுறை மேடையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
“அமெரிக்க உளவுத் துறை சந்தேக நபரை உடனே செயலிழக்கச் செய்தது. இப்போது அந்நபர் உயிருடன் இல்லை.
“பிரசாரத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் ஒருவர் மாண்டுவிட்டார். மேலும் இரு பார்வையாளர்கள் மோசமான காயத்துக்கு ஆளாகியுள்ளனர்,” என்று உளவுத் துறை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தது.
காயமுற்ற திரு டிரம்ப், சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவரின் பேச்சாளர் ஸ்டீவன் சியூங் கூறினார். திரு டிரம்ப், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் பின்னர் தெரிவித்தது.
திரு டிரம்ப், நிலைமையைத் துரிதமாகக் கையாண்டதற்கு அமெரிக்க உளவுத் துறையினருக்கும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் ‘ட்ரூத் சோசியல்’ எனும் தமது சமூக ஊடகத் தளத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார். கொல்லப்பட்ட பார்வையாளரின் குடும்பத்தாருக்கு அவர் தமது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.
சம்பவம் நிகழ்ந்து பல மணிநேரத்துக்குப் பிறகு தமது விமானத்திலிருந்து உதவியின்றி இறங்கிய காட்சி பதிவான காணொளியை அவரின் துணைத் தொடர்பு இயக்குநர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற அவரின் வலது காது அந்தக் காணொளியில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
திரு டிரம்ப், நியூ ஜெர்சியில் இருப்பதாகவும் இன்றிரவு அவர் அங்கே தங்கப்போவதாகவும் நியூயார்க் டைம்ஸ் ஊடகம் குறிப்பிட்டது.