பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கடைக்காரர்கள், புகைப்பொருள்கள் பொதுமக்களின் பார்வையில் தென்படாதபடி மறைத்துவைக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அன்றைய தினம் புதிய விதிமுறை நடப்புக்கு வந்ததையொட்டி புகைப்பொருள்கள் மறைத்துவைக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் உள்ள அத்தியாவசியப் பொருள் கடைகள், சுகாதார அமைச்சின் விதிமுறைக்கு இணங்கச் செயல்படுவதாக மலேசிய சிறு பொருள் வர்த்தகர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஹோங் சீ மெங் தெரிவித்தார். கடைக்காரர்கள், புகைப்பொருள்களைப் பொதுமக்கள் பார்க்கமுடியாத வகையில் இடம் மாற்றி வைத்துள்ளனர் அல்லது அவை இருக்கும் அறைகலன்கள் மேல் துணியைப் போற்றி மறைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசிய சிறுபொருள் வர்த்தகர் சங்கக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் கடைகளுக்கு இது பொருந்தும்.
வரும் அக்டோபர் மாதம் முதல் தேதிக்குள் சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருள்கள், பொதுமக்களுக்குத் தென்படும் வகையில் இருக்கக்கூடாது என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய அவற்றை விற்கும் சில்லறை வர்த்தகர்களுடன் இணைந்து செயல்படப்போவதாக மலேசிய சுகாதார அமைச்சு கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
விதிமுறை ஏப்ரல் முதல் தேதி நடப்புக்கு வந்தது. கிட்டத்தட்ட 51,000 சில்லறை வர்த்தகர்கள் இந்த விதிமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். புகைப்பொருள்கள் உள்ள அறைகலன்களை துணி போட்டு மூடுவதைவிட அவற்றைக் கதவுகள் உள்ள அறைகலன்களில் வைத்து மூடி வைப்பதே சிறந்தது என்ற சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

