பொது இடங்களில் சிறுகதை விநியோக இயந்திரம்

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க நூதன முயற்சி

பொது இடங்களில் சிறுகதை விநியோக இயந்திரம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Jun 2025 - 4:37 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் ரயில் நிலையங்கள், தகவல் மையங்கள், நிகழ்ச்சி அரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் சிறுகதை விநியோக இயந்திரங்கள் பொருத்தப்படவிருக்கின்றன.

பொத்தானை ஒரு தட்டு தட்டினால் போதும். சில நிமிடங்களில் படிக்கக்கூடிய , சிறுகதைகள், ரசீது போன்ற நீளமான தாள் ஒன்றில் அச்சிடப்படும். 

ஜப்பானிய மொழி எழுத்துக்கும் அச்சுத்துறைக்கும் புத்துயிரூட்டும் முயற்சியாக அந்தச் சேவை தொடக்கம் காணவுள்ளது.

ஜப்பானின் பண்பாட்டு விவகார அமைப்பின் ஆதரவுடன் இந்தச் சேவையை அந்நாட்டின் பெரிய புத்தக விநியோகிப்பு நிறுவனங்களில் ஒன்றான டோஹன் கார்ப், செயல்படுத்தவுள்ளது. 

நூல் வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களை, வாசிப்புப் பழக்கத்தின் அருமையைக் கண்டறியச் செய்வது அந்தத் திட்டத்தின் நோக்கம்.

பிரஞ்சு நிறுவனம் ஒன்றால் தொடங்கப்பட்ட அந்தச் சிறுகதை விநியோக இயந்திரங்கள், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

ஜப்பானில் பல்வேறு இடங்களில் அத்தகைய இயந்திரங்கள் ஆகஸ்ட் முதல் பொருத்தப்படவுள்ளன. 

குறிப்பிட்ட இயந்திரம் ஒன்றில் அச்சிடப்படும் கதை, அந்த இயந்திரம் உள்ள இடத்தைச் சார்ந்திருக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. நினைவில் கொள்ளக்கூடிய இடத்தில் நின்று கதையைப் படிக்கும்போது படிப்பவர்கள் உள்ளார்ந்த அனுபவத்தைப் பெறுவர் என திட்டத்தை உருவாக்கியவர்கள் நம்புகின்றனர்.

படிப்படியாக, கதைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் ஜப்பானிய ஹைக்கூவும் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்