பெய்ஜிங்: சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், சீனத் தலைவர் பரிசளித்த திறன்பேசியைப் பயன்படுத்தி அந்நாட்டு அதிபர் ஸி ஜின் பிங்குடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
அந்தத் திறன்பேசி சாதனம் உளவு பார்க்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று கடந்த முறை அவர்கள் சந்தித்தபோது சீனத் தலைவர் நகைச்சுவையாகக் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்தப் புகைப்படத்துடன், அதிபர் லீ, திரு. ஸி, அவர்களது மனைவியர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் பதிவேற்றினார்.
“கியோங்ஜுவில் பரிசாகப் பெற்ற ஸியோமியுடன் சீன அதிபர் ஸி மற்றும் அவரது மனைவியுடன் எடுக்கப்பட்ட ஒரு செல்ஃபி” என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் பதிவிட்டிருந்தார் தென் கொரிய அதிபர்.
மேலும், “இந்தப் புகைப்படம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு. அவர்களுக்கு நன்றி,” என்று மேலும் கூறினார் திரு லீ.
இனி சீன அதிபரை அடிக்கடி தொடர்புகொள்ளப்போவதாகக் கூறிய அவர், சீனாவுடன் இன்னும் அணுக்கமாகச் செயலாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

