காஸாமீது கருணை காட்டுங்கள்: இஸ்ரேலுக்கு வேண்டுகோள்

2 mins read
c568c660-66ce-4d27-8069-03e023e18f08
உலகச் சுகாதார நிறுவனத்தின் வருடாந்தரச் சந்திப்பில் டாக்டர் டெட்ரோஸ் பேசினார். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: காஸாமீது கருணை காட்டுங்கள் என்று இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசுஸ்.

வியாழக்கிழமை (மே 22) உலகச் சுகாதார நிறுவனத்தின் வருடாந்தரச் சந்திப்பில் டாக்டர் டெட்ரோஸ் இதைத் தெரிவித்தார்.

மேலும், அமைதியை நிலைநாட்டுவது இஸ்ரேலின் கையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காஸா மீதான போர் இஸ்ரேலைப் பாதிக்கிறது, இந்தப் போர் எந்த ஒரு தீர்வையும் தராது என்று திரு டெட்ரோஸ் கூறினார்.

“போரால் பாதிக்கப்பட்ட காஸா மக்களின் உணர்ச்சியை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. போருக்குப் பிறகு வரும் மனநல பாதிப்பு எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும்,” என்று டாக்டர் டெட்ரோஸ் தெரிவித்தார்.

“காஸாவில் மக்கள் எப்படி தவிக்கின்றனர் என்பதை உலகம் பார்க்கிறது. உணவைத் தடுப்பது தவறு, மருத்துகளைத் தடுப்பது தவறு,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசதந்திர நடவடிக்கையால் மட்டுமே இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

எத்தியோப்பியாவில் போர் ஏற்பட்டபோது அங்கு டாக்டர் டெட்ரோஸ் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ராணுவம் காஸாவுக்குள் எந்தவிதமான உதவிப் பொருள்களையும் செல்லவிடாமல் மார்ச் 2ஆம் தேதி முதல் தடுத்து வந்துள்ளது.

இந்நிலையில், மே 22ஆம் தேதி ஐக்கிய நாட்டு நிறுவனம் கிட்டத்தட்ட 90 கனரக வாகனங்களில் உதவிப்பொருள்களை காஸா மக்களுக்கு வழங்கினர்.

இதற்கிடையே உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகால பிரச்சினைகளுக்கான இயக்குநர் மைக்கல் ரயன் காஸா மக்களின் நிலைமை கவலை தருவதாகக் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 2.1 மில்லியன் மக்கள் இறக்கும் சூழலில் உள்ளதாக அவர் கூறினார்.

அவ்வட்டாரத்தில் பசியைப் போக்க வேண்டும், அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், சுகாதார கட்டமைப்புகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று மைக்கல் ரயன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்