டிரம்ப்பை ஓரங்கட்ட உக்ரேனிய எதிர்ப்பாளர்களை ஒன்றிணைக்கும் சீனா

2 mins read
6902af99-08c4-40df-8a12-9518608663c8
பெய்ஜிங் நகரில் இன்று (செப்டம்பர் 2) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்தனர். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: உக்ரேன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுடனும் அதற்குத் துணைபோகும் வடகொரியாவுடனும் கைகோத்து ஒற்றுமையைப் பறைசாற்றும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் உலகத் தலைவர்களும் அந்த நிலவரத்தை உற்றுநோக்கி வருகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடான சந்திப்பைத் தொடர்ந்து வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னையும் சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திக்க உள்ளார். அந்தச் சந்திப்புகள் சீனாவில் நிகழ்ந்து வருகின்றன.

புதிய வரிகள், பொருளியல் தடைகள் எனக் கூறி திரு டிரம்ப் அச்சுறுத்தி வருவதால் அதன் நீண்டகால நட்பு நாடுகளிடையிலான உறவு மங்கி வருவதாக புவிசார் அரசியல் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேளையில், உலக ஒழுங்கை மேற்கத்திய நாடுகள் வழிநடத்தும் போக்கை மாற்ற அதிகார பலம் பொருந்திய நாடுகள் முயன்று வருகின்றன. திரு டிரம்ப்பை ஓரங்கட்டும் முயற்சி அது.

சீனத் தலைநகரில் நிகழவிருக்கும் இவ்வாரச் சந்திப்பு அந்த நாடுகளில் சீன அதிபருக்கு இருக்கும் செல்வாக்கை நிருபிப்பதாக அமையும் என்பதும் பகுப்பாய்வாளர்களின் கருத்து ஆகும்.

அத்துடன், 2024 ஜூன் மாதம் ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் கையெழுத்தான இருதரப்பு தற்காப்பு உடன்பாடு தொடர்பிலான முத்தரப்பு உறவு ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் அந்தச் சந்திப்பு அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறினர்.

“மேலை நாடுகளின் ஆதிக்கம், அதிகார அரசியல் ஆகியவற்றுக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து உருவாக்க வேண்டும். உண்மையான பன்முகத்தன்மையை நாம் கடைப்பிடிப்பது அவசியம்,” என்று திரு ஸி திங்கட்கிழமை (செப்டம்பர் 1) கூறியிருந்தார்.

அன்றைய தினம் திரு புட்டினும் திரு ஸியும் பங்கேற்ற உச்சநிலைக் கூட்டம் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது. மேற்கத்திய நாடுகளைச் சேராத 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் அதில் பங்கேற்றனர். உலகளாவிய புதிய பாதுகாப்பு மற்றும் பொருளியல் ஒழுங்கை உருவாக்கும் நோக்கம் கொண்டது அந்தக் கூட்டம்.

அதன் அடுத்த கட்டமாக புதன்கிழமை (செப்டம்பர் 3) பெய்ஜிங் நகரில் வடகொரிய அதிபர் கிம்மும் சீன அதிபர் ஸியும் சந்திக்க உள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் நிறைவைக் கடைப்பிடிக்க அன்றைய தினம் ஆகப்பெரிய ராணுவ அணிவகுப்புக்கு பெய்ஜிங் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் திரு கிம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்