அறிவியல் ஆய்வுக்கு சிலிக்கான் வேலி 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் உறுதி

அறிவியல் ஆய்வுக்கு சிலிக்கான் வேலி 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் உறுதி

படம்: ஏஎஃப்பி

09 Oct 2026 - 12:35 pm

2 mins read

வாஷிங்டன்: சிலிக்கான் வேலி பெருநிறுவனங்கள் அறிவியல் ஆய்வுக்காக 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3.07 பில்லியன்) நிதி வழங்க உறுதியளித்துள்ளன. வாஷிங்டனில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஆய்வுத்துறை உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அரசாங்கம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘அறிவியல்: ஒரு புதிய பொற்காலம்’ என்று அந்த மாநாடு குறிப்பிடப்படுகிறது.

ஜெனிசிஸ் திட்டத்தின்கீழ் 15க்கும் மேற்பட்ட அமெரிக்க அரசாங்க அமைப்புகளின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு இந்நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

இதில் என்விடியா நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலரும் ஏஎம்டி நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலரும் ஓப்பன்ஏஐ நிறுவனம் 200 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்கவுள்ளன. ஆந்த்ரோபிக், ஆல்ஃபபெட்டின் கூகல் நிறுவனங்கள் தரப்புக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும், அமெரிக்க ஆய்வாளர்களின் அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், கணிதக் கல்வித் திட்டங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்ற அதிபர் டோனல்ட் டிரம்ப், முன்னணித் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்கு தேசியப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெல்லா, டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மைக்கேல் டெல் இருவருக்கும் தொழில்நுட்ப, புத்தாக்கப் பதக்கமும் என்விடியாவின் ஜென்சன் ஹுவாங், ஆல்ஃபபெட்டின் செர்ஜி பிரின், ஏஎம்டியின் லிசா சு, டெஸ்லாவின் இலான் மஸ்க் ஆகியோருக்கு தேசிய அறிவியல் பதக்கமும் வழங்கப்பட்டன. திரு மஸ்க்கை நவீனகால தாமஸ் எடிசன் என்று அதிபர் டிரம்ப் புகழ்ந்துரைத்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் மீதான சார்புநிலையைக் குறைக்கும் நோக்கில், எச்-1பி விசா திட்டத்திலிருந்து மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களை அமெரிக்க நிர்வாகம் இடைநீக்கம் செய்த சில மணிநேரங்களில் இந்த மாநாடு நடைபெற்றது. வரவிருக்கும் நவம்பர் இடைத்தவணைத் தேர்தலுக்கு இடையே, தரவு மையங்களால் உயரும் மின்சாரக் கட்டணம், வேலைவாய்ப்புக் குறித்த மக்களின் அச்சம் போன்றவை இருந்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கக் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளையே டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காதொழில்நுட்பம்நிறுவனம்செயற்கை நுண்ணறிவுஎலான் மஸ்க்டோனல்ட் டிரம்ப்