ஜகார்த்தா: பசுமை எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை அம்சங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் முக்கியமான மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் சாதகமானவையாகப் பார்க்கப்படுகின்றன. இந்நிகழ்வு, பசுமை அம்சங்கள் தொடர்பிலான பங்காளித்துவங்களைப் பொறுத்தவரை ஒரு முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அந்த மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. டாக்டர் டான், இந்தோனீசிய எரிசக்தி, கனிம வளங்கள் அமைச்சர் டாக்டர் பாஹ்லில் லஹாடியா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
கரிமப் பயன்பாடு குறைவாக இருக்கும் மீள்திறன்மிக்க வருங்காலத்தை உருவாக்கும் இலக்கை இரு நாடுகளும் கொண்டுள்ளன; அந்த வகையில், இந்த ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் பலனளிக்கும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
“இன்றைய ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வு ஒரு போக்குக்குச் சின்னமாக மட்டும் விளங்கவில்லை. நமது திட்டங்களைச் செயல்படுத்தவும் நெருங்கிய பங்காளித்துவம், இருதரப்புக்கும் இடையே உள்ள நம்பிக்கை ஆகியவற்றின் முலம் அதைச் சாதிப்பதையும் இந்நிகழ்வு சித்திரிக்கிறது,” என்று டாக்டர் டான் தமது உரையில் விவரித்தார். உலகளவில் பருவநிலை சவால்களும் நிலையற்ற பொருளியல் சூழலும் நிலவிவரும் வேளையில் இந்த ஒப்பந்தங்கள் இருதரப்புக்கும் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன என்றும் அவர் விளக்கினார்.
நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடன் இருநாட்டுப் பொருளியல்களைக் கரிமத்தை அதிகம் சார்ந்திராமல் இருக்கச் செய்வது, புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கக்கூடிய துறைகளை அடையாளம் கண்டு திறந்துவிடுவது ஆகியவை இந்த ஒப்பந்தங்களின் இலக்குகள் என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
“இது, நீண்டகால ஒத்துழைப்புக்கான அடித்தளம்,” என்றார் அவர்.