சிங்கப்பூர், மலேசியக் காவல்துறை இணைந்து 30 பேர் கைது

சிங்கப்பூர், மலேசியக் காவல்துறை இணைந்து 30 பேர் கைது

படம்: பிக்சாபே

21 Oct 2026 - 5:06 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், ஜோகூர் ஆகிய பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் மலேசியாவின் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையும் சிங்கப்பூர் காவல்துறையும் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில், எல்லை தாண்டிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையானது, சிங்கப்பூர் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த எல்லை தாண்டிய குற்றச் கும்பல்களை முடக்குவதையும் சிங்கப்பூர் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நபர்களைக் கைது செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

தொடக்கக்கட்ட சோதனையில், சிங்கப்பூரில் தேடப்பட்ட ஒரு மலேசியர் மற்றும் ஒரு சிங்கப்பூரர் உட்பட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் அடங்கும் எட்டு வெளிநாட்டவர்கள் மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட கால அளவைத் தாண்டி தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதே நடவடிக்கையில், இணையவழி பாலியல் சேவைகளை நடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 19 முதல் 41 வயதிற்குட்பட்ட ஐந்து ஆண்கள், 16 பெண்கள் உட்பட மேலும் 21 வெளிநாட்டவர்களை அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட அடையாள ஆவணங்களை ஆய்வு செய்ததில், கைது செய்யப்பட்டவர்களில் 17 சீன நாட்டினரும் மூவர் வியட்னாமைச் சேர்ந்தவர்களும் ஒருவர் லாவோஸ் நாட்டினரும் ஆவர்.

மேலும், இணையவழி பாலியல் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு மின்னிலக்கச் சாதனங்களும் மேல் விசாரணைக்காகக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபாலியல்கைது