தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர், மற்ற நாடுகளின் தாதியர் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படும்

2 mins read
ஆஸ்திரேலியாவில் கடும் தாதியர் குறைபாடு
d4716505-32f9-4b65-be9f-9848702ba7c5
வெளிநாட்டு தாதியர் பல்வேறு வகையான ஆஸ்திரேலிய விசாக்களுக்கு மனுச் செய்யலாம். அவற்றில் ஒன்று நிரந்தரவாசம் பெற்ற பின்னர் குடியுரிமை பெறும் வகையிலான விசாவும் ஒன்று. - படம்: ஐஸ்டாக்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய விரும்பும் சிங்கப்பூர் உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த தாதியர்களின் விண்ணப்பம் இவ்வாண்டு ஏப்ரலிலிருந்து விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவை வரவேற்ற அந்நாட்டு சுகாதார ஊழியர்கள் அது அங்கு நிலவும் கடும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் எனக் கூறினர்.

எனினும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் பல காலமாக நீடித்து வரும் தாதியர் பற்றாக்குறை தொடர்பான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்குமாறு தாதியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் ‘ஹெல்த் பிராக்டீஷனர் ரெகுலேஷன் ஏஜன்சி’ என்ற சுகாதாரப் பராமரிப்பு ஒழுங்குமுறை முகவை அறிமுகம் செய்யும் இந்தத் திட்டம் பதிவு செய்யப்பட்ட, 2017ஆம் ஆண்டு தொடங்கி 1,800 மணிநேரங்களுக்கு மேல் தாதியராகப் பணிபுரிந்த அனுபவமுடையோரைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வகைத் தாதியர் தேர்வு மதிப்பீடுகள் இல்லாமல் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்படுவதற்கு வழி வகுக்கிறது.

தாதியர் தேர்வு முறையில் செய்யப்படும் இந்த மாற்றங்கள் சிங்கப்பூர், பிரிட்டன், அயர்லாந்து, அமெரிக்கா, ஸ்பெயின், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, ஓன்டாரியோ மாநிலங்களைச் சேர்ந்த தாதியருக்குப் பொருந்தும்.

இந்த நாடுகளிலிருந்து தாதியரின் விண்ணப்பங்கள் ஒன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் பரிசீலிக்கப்படும் என்று அந்த முகவை தெளிவுபடுத்தியது. அந்தப் பரிசீலனைக் காலம் தற்பொழுது ஒன்பதிலிருந்து 12 மாதங்கள் வரை உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

தாதியர் பற்றிய இந்தத் திட்டம் ஆஸ்திரேலிய தாதியரால் வரவேற்கப்பட்டுள்ளது. இது தங்களுக்கு இருக்கும் அழுத்தத்தைக் குறைக்க உதவும் என அவர்கள் கூறினர்.

ஆஸ்திரேலியாவில் 2035ம் ஆண்டு தாதியர் பற்றாக்குறை 71,000ஐ எட்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகரிப்பு ஒருபுறமிருக்க பயிற்சி பெற்ற தகுதியான உள்ளூர் தாதியரை தக்கவைக்க அது திணறுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்