மணிலாவில் சட்டவிரோதமாகத் துப்பாக்கிகள் விற்றதாக நம்பப்படும் சிங்கப்பூரர்கள் கைது

1 mins read
370e70b4-baaa-492b-a826-3e3efde71780
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளும் தோட்டாக்களும். - படம்: குற்றப் புலனாய்வு, துப்பறிவு குழு/ஃபேஸ்புக்

மணிலா: பிலிப்பீன்சில் சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காகவும் விற்பனை செய்ததற்காகவும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் என அந்நாட்டுக் காவல்துறை சனிக்கிழமையன்று (ஏப்ரல் 19) தெரிவித்தது.

அம்மூவரில் ஒருவரான பிலிப்பீன்ஸ் நாட்டவர் இடைத்தரகர் என விசாரணையில் தெரியவந்ததாக அது சொன்னது.

மேலும், ஏப்ரல் 17 ஆம் தேதி மணிலாவில் உள்ள வெலன்சுலா நகரில் காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 11 துப்பாக்கிகள் வைத்திருந்ததற்காகச் சிங்கப்பூரர்கள் இருவரும் பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாகப் பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறையின் குற்றப் புலனாய்வு, கண்டறிதல் குழு கூறியது.

தனியார் ஆயுதக் குழுக்கள், துப்பாக்கி வைத்திருப்போர்மீது அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில், மணிலாவிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் துப்பாக்கிகளை அம்மூவர் விற்பனை செய்வதாகத் தகவல்கள் வந்தன.

பல மாதங்களாக அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர், தங்களுக்குக் கிடைத்த தகவல்களை உறுதிப்படுத்திய பிறகு கைது நடவடிக்கையில் இறங்கினர்.

கைது செய்யப்பட்டவர்கள்மீது அந்நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்குத் தலா 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்