தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் விபத்தில் சிங்கப்பூர் சைக்கிளோட்டி உயிரிழப்பு

1 mins read
உயிரைப் பறித்த சாலைப் பள்ளம்
db652220-4f0e-4ea7-a203-ab578cc47195
சாலையோரமாகக் கிடக்கும் சிங்கப்பூரரின் சைக்கிளும் அவர்மீது மோதிய லாரியும். - படங்கள்: தி ஸ்டார்

கூலாய்: சாலையில் இருந்த பள்ளத்தால் தவறிவிழ, சரளைக்கற்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி சிங்கப்பூர் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

அந்த 42 வயது ஆடவரின் உயிரைப் பறித்த இவ்விபத்து, சனிக்கிழமை (ஜூன் 14) மலேசியாவின் ஜோகூரிலுள்ள ஜாலான் குனுங் பூலாயில் நேர்ந்தது.

“மேலும் மூன்று சைக்கிளோட்டிகளுடன் சென்ற அந்த ஆடவருக்குத் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே இறந்துபோனார்,” என்று கூலாய் காவல்துறை உதவி ஆணையர் டான் செங் லீ விளக்கினார்.

மாண்ட சிங்கப்பூரரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கூலாயிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் 41 வயது லாரி ஓட்டுநருக்குக் காயமேதும் ஏற்படவில்லை.

இவ்விபத்து தொடர்பில், கவனமின்றி அல்லது அபாயமான முறையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிந்து, காவல்துறை விசாரித்து வருகிறது.

விபத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. லாரி ஓட்டுநர் அதனைப் பதிவுசெய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பின்னர் அக்காணொளி அகற்றப்பட்டுவிட்டது.

தலைக்கவசம் அணிந்த ஆடவர் ஒருவர் லாரியின் அடியில் சிக்கியிருந்ததை அக்காணொளி காட்டியது.

குறிப்புச் சொற்கள்