காஸாவின் மனிதநேய முயற்சிகளுக்குச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் கூடுதலாக $400,000 நிதியாதரவு வழங்கவிருக்கிறது. இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து வன்முறை அங்கு மீண்டும் தலைதூக்கியுள்ளது.
வியாழக்கிழமை (மார்ச் 27) வெளியிட்ட அறிக்கையில் அவசர சுகாதாரச் சேவைகள், அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பு, மனநல ஆதரவு, நிவாரண முயற்சிகள் ஆகியவற்றுக்கு நிதியாதரவு பயன்படுத்தப்படும் என்று சங்கம் சொன்னது.
காஸாவில் உள்ள ராஃபா எல்லையில் 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உயிர்காக்கும் அவசரப் பராமரிப்பையும் அத்தியாவசிய மருத்துவப் பராமரிப்பையும் அன்றாடம் ஏறக்குறைய 200 பேருக்கு வழங்குகிறது. சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதியாதரவு அந்த முயற்சிக்கும் உதவும்.
மனிதநேய உதவுகளில் எகிப்திலிருந்து காஸாவுக்கு செல்வதில் உதவ செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு டி.எஸ். விக்ரம் ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து கைரோவுக்கு அனுப்பப்படுவார்.
இம்மாதம் 18ஆம் தேதி இஸ்ரேல் காஸாமீதான அதன் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. அது ஏறக்குறைய இரண்டு மாதம் நடப்பில் இருந்த சண்டைநிறுத்த உடன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே மீண்டும் மூண்ட மோதலில் 830க்கும் அதிகமானோர் மாண்டதாக காஸா சுகாதார அமைச்சு சொன்னது.
இவ்வாண்டு ஜனவரி 19ஆம் தேதி இஸ்ரேலும் ஹமாஸும் செய்துகொண்ட போர் நிறுத்த உடன்பாட்டை அடுத்து சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் $300,000 மதிப்புள்ள நிவாரணப் பொருள்களைக் காஸாவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது.
சங்கத்தின் தற்போதைய நிதித் திரட்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீடிக்கும். நன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்கள் https://redcross.sg/donate-gazacrisis என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இதுவரை கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை எகிப்திய செம்பிறை சங்கத்துடன் இணைந்து கொடுத்துள்ளது.