இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ஆதரவு வழங்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 300,000 வெள்ளி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொட்டலங்கள், உடலைச் சுத்தப்படுத்த உதவும் பொட்டலங்கள், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்டவை தாங்கள் வழங்கவிருக்கும் நிவாரணப் பொருள்களில் அடங்கும் என்று செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டது.
“போர் நிறுத்தம் இப்போது நடப்பில் இருப்பதை எண்ணி சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மகிழ்ச்சியடைகிறது. அது, இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் உடனடித் தேவைகளைக் கவனித்துக்கொள்ள முக்கியமான வாய்ப்பளிக்கிறது,” என்றார் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளரும் தலைமை நிர்வாகியுமான பெஞ்சமின் வில்லியம்.
“உயிர்களைக் காக்கக்கூடிய உடனடி ஆதரவு வழங்குவதில்தான் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். அந்த வகையில், உடனடி மருத்துவப் பராமரிப்பு, மனநல ஆதரவு, தேவையான நிவாரணப் பொருள்கள் ஆகியவை தேவைப்படுவோருக்குத் தேவையான உதவி வழங்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆறு வாரங்கள் நீடிக்கவிருக்கும் போர் நிறுத்தம் நடப்புக்கு வந்ததையடத்து பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்ட கிட்டத்தட்ட 100 இஸ்ரேலியர்களில் 33 பேரையும் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் ஏறத்தாழ 1,000 பாலஸ்தீனர்களையும் கட்டங்கட்டமாக விடுவிப்பது நோக்கம் என்று நம்பப்படுகிறது.